பக்கம்:தாழம்பூ.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

ஜனரஞ்சகமாக எழுதுவது என்பது, படிக்கும் மக்கள் புரிந்துகொள்ளும்வகையில் எழுதுவது என்பதுதான்.எழுதுகிறவன் சிந்தனையில் தெளிவு இருந்தால், எழுத்தில் தெளிவு இருக்கும். அதை வாசகன் புரிந்து கொள்வான். இப்படி எழுத்தாளனை, வாசகன், உரையாசிரியர் உதவி இல்லாமல் புரிந்து கொள்வதால், அந்தப் படைப்பு கனத்தை இழந்துவிடாது. ஒருவர், தனக்கே தெளிவில்லாமல் எழுதுவது, தன் இலக்கு என்ன என்பது தனக்கே தெரியாமல் எழுதுவது, அதன் விளைவாகப் படிப்பவன் சிரமப்படுவது, இதில்"ஏதோ” இருக்கும் என்ற பிரமையைத் தன்னுள் விரித்துக்கொண்டு, தன் சிரமத்தையே இலக்கியத் தரமாகப்பாவிப்பது

இவை எல்லாம் இலக்கிய அதிகாரமாகும்.

இலக்கியத் தெளிவும் இலக்கியத் தரமும் முரண்பட்டவை அல்ல!

படைப்பின் புரிதலும் படைப்பின் கனமும் வெவ்வேறானவை அல்ல!

ஒரு எழுத்தாளருக்குதான் நினைப்பதைச் சரியாகச் சொல்லத் தெரியாதுபோனால், அவர்தேர்ந்த எழுத்தாளனாக இருக்கமுடியாது.

ஒருவரது, மொழிப் பலவீனம், அந்த மொழியின் பலவீனமாக மாறும்; அதை மறைக்க - அதாவது பலவீனத்தையே பலமாக்கச் செய்யப்படும் முயற்சியே, இலக்கியக் கனம், இலக்கியத் தரம் என்ற கண்டுபிடிப்புகள். தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு எதிரியின் மீது ஏவும் அஸ்திரமே, தெளிந்த நீரைப்பார்த்து ஆழமில்லை என்பது.

பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் - இவர்கள் எல்லாம் ஜனரஞ்சகமாக எழுதியவர்கள் தான். மக்களை மனதிலேயே வைத்துக்கொண்டு எழுதியவர்கள் தான். ஜனரஞ்சகமாக எழுதியதால், இவர்கள் படைப்புகளில் இலக்கியத் தரம், வறுமையை எய்திடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/6&oldid=636810" இலிருந்து மீள்விக்கப்பட்டது