பக்கம்:தாழம்பூ.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 47

போலீஸ்காரரே, வீட்டிற்குள் வந்து, டி.வி. செட்டையும், கண்ணாடி பிரேமிற்குள் இருந்த ஓவியப் பொருட்களையும் பார்த்துவிட்டு, திருப்தியுடன் மனதிற்குள் அசைபோட்டபடியே தலையாட்டுவதைக் கண்டு, அவன் கொதித்துப் போனான். அவருக்கு முன்னால் வந்து இரண்டு கைகளையும் நீட்டியபடியே கத்தினான் :

“இந்தாங்க சார். உங்களைத் தான். விலங்கை மாட்டி இழுத்துக்கிட்டு வேணுமுன்னாலும் போங்க. இந்தாய்யா கை. எங்கேய்யா உன் விலங்கு?”

அனுபவப்பட்ட அந்த காவலருக்கு, அவன் ஒரு அப்பாவி என்பது உடனடியாகப் புரிந்தது. அதே சமயம், இந்த மாதிரி கேஸ்கள் காமதேனுவாக மாறும் என்பதும் தெரிந்தது. எதுவும் பேசாமல், அவனை அவன் போக்கிலேயே விட்டார். இதற்குள், இளங்கோ மேலும் அதிகமாய் உணர்ச்சிவயப்பட்டு, அவனே, அவரது கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான். என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் பேசினான் :

“வாங்க சார், போகலாம். நான் அவளை கற்பழிக்க முயற்சி செய்யல. செய்திட்டேன். அதுக்காகவே திட்டம் போட்டு அவள இந்த ஏரியா பக்கம் வரவழைச்சு இரும்புக் கம்பிய திருடச் சொன்னேன். வாங்க சார் போகலாம். வராட்டால் என்ன செய்வீங்க!”

“இதுக்கெல்லாம் மசியற ஆளு வேற; நான் இல்ல. தேவைப்பட்டால் விலங்குகூட மாட்டி இழுத்துக்கிட்டுப் போவோம். போலீஸ் கிள்ளுக்கீரை இல்லை. எங்களுக்கு பங்களாவும் ஒண்ணுதான்.சேரியும் ஒண்ணுதான். ஏதோகையில, காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டு, அப்படி இப்படி நடந்துகிட்டால், தேறலாம். நீ என்னடான்னா உதவி செய்ய வந்த என்னையே வம்புக்கு இழுக்கிறீயே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/61&oldid=636812" இலிருந்து மீள்விக்கப்பட்டது