பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாழ்வுணர்ச்சி - உயர்வுந்தல்

15

தோன்றும் அந்த உணர்ச்சிதான் தாழ்வுணர்ச்சி என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. இந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அடிமனத்தில் ஏற்படும் சிக்கல்தான் தாழ்வு மனக்கோட்டம் எனப்படும். இதைப் பற்றிப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.

மனிதன் பிறக்கும்போது ஒருவிதமான சக்தியும் அவனுக்கில்லை. கோழிக் குஞ்சு முட்டையிலிருந்து வெளியே வந்ததும் தானாகவே நடக்கிறது. தாய்ப் பறவை காட்டும் தீனியைக் கொத்தித் தின்கிறது. மீன் குஞ்சு முட்டையை விட்டு வந்ததும் நீந்துகிறது; தனக்கு வேண்டிய உணவைத் தானே தேடிக்கொள்கிறது; தன்னைக் காத்துக் கொள்ள முயல்கிறது. மாட்டுக் கன்று பிறந்தவுடனே தாயின் பால் சுரக்கும் மடியை நாடிச் சென்று பாலருந்துவதற்கு வேண்டிய எழுந்து நடக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறது. மனிதக் குழந்தைக்கு அந்தச் சக்தி கூடக் கிடையாது. தாய்ப்பாலருந்தும் நிலையைத் தாண்டிய பிறகு மனிதக் குழந்தை உலகத்தில் பிறப்பதுதான் சரியான பருவமாகும் என்று உயிரியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த நிலையை அடைவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே பிறந்து விடுவதால்தான் மனிதக் குழந்தை ஒரு விதமான சக்தியுமில்லாமல் பிறருடைய உதவியையே எதிர் பார்த்திருக்கும் நிலையிலிருக்கிறது.

நிலைமை இவ்வாறிருப்பதால் மனித இனம் அழியாது நிற்பதற்கு மக்கள் ஒன்றுகூடிச் சமூகமாக வாழவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அனுபவத்தின் மூலமாக இந்த உண்மை நன்கு புலப்பட்டது; சேர்ந்து வாழ்ந்ததால் மக்களினத்தின் பலம் அதிகரித்தது; அதனால் மக்களினம் பெருகவும் வழியேற்பட்டது. கொடிய விலங்குகளிடத்