பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர்விலே ஆசை

17

பாட்டைப் பேணும் அவனுடைய ஆர்வத்தை இந்தக் குறைப்பாட்டுணர்ச்சி குலைக்க முயல்கிறது. குறைகளால் அவனுடைய தன் மதிப்புக் குறைகிறது; அதனால் ஒருமைப் பாட்டிலுள்ள ஆர்வமும் தளர்கிறது. இதன் காரணமாகவே மனிதன் நேர்மையான வழியை விட்டுத் தவறி நடக்கத் தொடங்குகிறான்.

நரம்புக் கோளாறுகள், மனநோய்கள் முதலியனவும் குற்றம் புரியும் தன்மையும் இதனால் ஏற்படுகின்றன. குறைகளால் ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியின் காரணமாக ஆண்பெண்ணுறவான இணைவிழைச்சு நடத்தையிலும் தவறி நடக்கிறார்கள்; சிலர் கலைத்திறமைகளின் மூலமாக மக்கட் கூட்டத்தின் மதிப்பைப் பெற்றுத் தமது உயர்வை நிலைநாட்ட முயலலாம். ஆனால் இது எவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று ஆட்லர் கூறுகிறார்.

ஆட்லரின் கருத்தையொட்டி இங்கு சுருக்கமாகக் கூறிய விஷயங்களை இன்னும் சற்று விரிவாகப் பின்வரும் பகுதிகளிலே காண்போம்.