பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாகரிகப் பேச்சு

3


சில நாட்களுக்கு முன்பு எனது நண்பர்களில் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஒரு சுவையான சம்பாஷணையில் கலந்துகொள்ள நேர்ந்தது. என் நண்பரும் அவர் மனைவியும் நானும் பல விஷயங்களைப் பற்றி மனம்விட்டுத் தாராளமாகப் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் மேல் ஒருவர் குறை கூறுவதையும் அந்தச் சமயம் விலக்காகக் கொள்ளவில்லை. என் நண்பர் கொஞ்சம் ஒதுக்கமாக இருப்பவர்; யாருடனும் அதிகமாகப் பழகமாட்டார்; சாதாரணமாக அவர் உறவினர் வீட்டுக்குப் போகிற வழக்கமில்லை. அவருடைய இந்தக் குணங்கள்தான் என்னை அதிகமாகக் கவர்ந்து அவருடைய நட்பைத் தேடும்படி செய்தது. அவருடைய மனைவி அவர் உறவினருடைய வீடுகளுக்குப் போகாதிருப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவளுக்கு ஊர் சுற்றுவதிலும் அரட்டை அடிப்பதிலும் பிரியம் அதிகம்.

"அவர் ஏன் எங்கும் போகிறதில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னைக் கேட்டாள்.

"நீங்களே சொல்லுங்கள். உங்களுக்குத்தான் என்னை விட நன்றாகத் தெரிந்திருக்க முடியும்" என்றேன் நான்.

"அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை; அதுதான் காரணம்" என்று அவள் கூறினாள்.

எனக்கு விஷயம் புரியவில்லை. "எதனால் தாழ்வு மனப்பான்மை?" என்று கேட்டேன்.

"அவருக்கு ஒரு கால் கொஞ்சம் குட்டையாக இருக்கிறதனால் சிறிது சாய்ந்து சாய்ந்து நடக்கிறாரல்லவா? அதனால் மற்றவர்களோடு பழகுவதற்கு அவர் கூச்சப்படுகிறார். ஆனால் அது அவருக்கே தெரிந்திருக்காது. அவர் மனத்திற்