பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தாழ்வுணர்ச்சி-உயர்வுந்தல்

காலணா நாணயம் புதிதாக உருவாகி வெளிவரும்போது பார்த்திருக்கிறீர்களா? அதற்கு ஒரு தனிப் பளபளப்பிருக்கும். அதில் பொறிக்கப்பட்டிருக்கும் உருவங்களும், எழுத்துக்களும் தெளிவாக விளங்கும். ஆனால் அந்த நாணயம் புழக்கத்தில் கைமாறிக் கைமாறிச் செல்லும்போது மெதுவாக அதன் பளபளப்பும் உருவத்தெளிவும் மறைந்து விடுகின்றன. கடைசியிலே அது ஒரு வட்டகத் தகடு போல உருவமும் எழுத்தும் இல்லாமல் மழுங்கிப்போய் விடுவதுண்டு. இதே கதி சில சொற்களுக்கும் ஏற்படுகின்றது. முதலில் அவற்றிற்கிருந்த பொருள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிப் போகின்றது. மனக்கோட்டம் என்ற சொற்றொடரும் இப்படித்தான் பொருள் மாறுபட்டு வந்திருக்கிறது. சிலர் இதை மனச்சிக்கல் என்று குறிப்பிடுவார்கள். சிக்கல் என்று ஒரே சொல்லால் வழங்குவதுமுண்டு.

ஆஸ்திரியா நாட்டவரான சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud) என்பவர் உளவியலில் ஒரு புதிய சகாப்தத்தை உண்டு பண்ணியவர். அவர்தான் மனத்திலே அடிமனம் என்ற மறைந்திருக்கும் பாகம் ஒன்று உண்டென்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியவர். அடிமனத்திற்கு மறைமனம், நனவிலிமனம் என்றும் பெயருண்டு. அதிலே மறைந்திருக்கும்படியான உணர்ச்சிகளும் ஆசைகளும் சாதாரணமாக நமக்குத் தெரிவதில்லை. நமது