பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கரு நெல்லிக்கனி

மாரிபோல் வாரி வழங்கும் வள்ளலாம் அதியமான் நெடுமான் அஞ்சி அன்று அடைந்த அகமகிழ்வுக்கு ஓர் எல்லையே இல்லை. என்றும் போலவே அன்றும் வேட்டையாடித் திரும்பினான்; அரண்மனைக்குத் திரும்பிய அவன் மனம் அக்கணம் அளப்பரிய ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு செயலுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்?

ஆம்; அப்பொழுது அரசனின் மனமகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.

அக்காரணத்தின் பிரத்தியட்ச நிரூபணமாக அப்பொழுது அவனுடைய உள்ளங்கையில் அழகு கனிந்த கரு நெல்லிக்கனி ஒன்று காட்சியளித்துக் கொண்டிாருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவன் நெஞ்சம் ஆனந்தக் கடலாடிக் கொண்டிருந்தது.