முத்தமிழரசக் குடிகளுள் பாண்டியர் குடியே முதலாவது தோன்றியதென்றும், பின்பு முறையே சோழ சேரக் குடிகள் தோன்றினவென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்கி வருகின்றது.
வடமொழியில் முதற் பாவிய(காவிய)மாகிய வான்மீகி யிராமாயணத்தில் சேர சோழ பாண்டியர் மூவரும் கூறப்பட் டுள்ளனர்.
கி.மு. 2000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட தொல் காப்பியத்திலேயே,
"போந்தே வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (பொருள். 60)
என்றும்,
"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (பொருள்.381)
என்றும் மூவேந்தர் குடிகளும், முதுகுடி எனத் தமிழ் மறவர் குலமும் பழைமையாகக் கூறப்பட்டுள்ளன. மறவர் குடியை,
"கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி" (பு.பொ.வெ.35)
என்னும் புறப்பொருள் வெண்பா மாலையும்.
பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலைக்கழகம் முத்தமிழ்க் கழகமாயிருந்ததினால்; அதற்குமுன் முத்தமிழ்தொகுதற்கும், அதற்குமுன் இயற்றமிழ் தோன்றற்கும், அதற்குமுன் இலக்கணமும் அதற்குமுன் இலக்கியமும் அதற்குமுன் எழுத்தும் அதற்குமுன் மொழியும் தோன்றற்கும் கணக்கிட முடியாத காலஞ்சென்றிருத்தல் வேண்டும். பொருளதிகாரத்தில் கூறப்படும் ஐந்திணை நிலையும் 'தழைகொண்டு சேறல்', 'இயற்கைப் புணர்ச்சி' முதலிய பகுதிகளும், தமிழர் துவக்கந்தொட்டுத் தென்னாட்டிற்கே உரியர் என்பதை உணர்த்தும். தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்ததாதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும்.