"விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் லன்ன வல்லா ளன்னே" (புறம். 170)
எனப் பிட்டங்கொற்றனும்,
"அடிபொலியக் கழறைஇய வல்லாளனை வயவேந்தே" (புறம். 40)
எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும் பாடப் பட்டனர்.
கடுந்திறமையுள்ள இருபாலாரையும் வல்லாள கண்டன் வல்லாள கண்டி எனப் புகழ்வது இன்றும் தமிழ்நாட்டுலகவழக்கு.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராசன் என்னும் ஓர் அரசன் இடைக்காலத்தில் ஆண்டதாக அருணாசலபுராணம் கூறும்.
"மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கும் அரபிக் கடலுக்குக் கிழக்கும் கூர்ச்சரத்திற்குத் தெற்கும் கோவாவுக்கு வடக்குமாக" வுள்ள கொங்கண தேசம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ நாடுகளுன் ஒன்றாயிருந்ததாக இலக்கண நூல்கள் கூறும்.
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில வாட்சி அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையில் சொன்னய முடையவும்"