என்று கூறுவதாலும், மைசூர் நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை 12ஆம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை யென்பது அறியப்படும்.
ஆகவே, பம்பாய் மாகாணமும் ஐதராபாத்துச் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு, வடசொற் கலப்பால் 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப் பிரிந்து, பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளிவந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ள தென்க.
"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்" "கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்"
என்று சிலப்பதிகாரங் கூறுவதால் கொங்கண நாட்டைச் சேர்ந்த கருநட நாட்டிலேயே கன்னடம் முதலாவது தோன்றியிருத்தல் வேண்டும். இப்போது கொங்கண நாட்டிற்கும் மலபாருக்கும் இடைப்பட்ட மேல்கரை நாடே, தென்கன்னடம் வடகன்னடம் என இரு பகுதியாய்ப் பகுக்கப்பட்டுக் கன்னடம் (Kannada) என்னும் பெயரால் வழங்கி வருகின்றது. வடகன்னடம் கொங்கண நாட்டுப் பகுதியே. இதனால், கரைநாடு என்பதே கருநாடு என மருவிற்று என்று கொள்ளவும் இடமுண்டு. கொங்கணவர் என்றும் கொங்கணியர் என்றும் கூறப்படுவர். கொங்கணார் என்று ஒரு பண்டைத் தமிழ்ச் சித்தர் இருந்தார்.*