பக்கம்:திராவிடம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-5-

இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது. பகைமை பெரிதும் உண்டு. இந்தத்தனித்தனி இன இயல்புகள் இருப்பதால், இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்த இனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும் இல்லையேல் எந்த இனம் தந்திரத்தாலும் சூது சூழ்ச்சியிலும் தன்னலத்துக்காகப் பிறரை நசுக்கும் சுபாவத்திலும் கைதேர்ந்து இருக்கிறதோ அந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டி நேரிடும்.

4. இந்தியா ஒரே நாடு என்றுகூறி வருவதால் ஆரிய ஆட்சியின் காரணமாக மற்ற இன நலன்கள் தவிடு பொடியாயின.

5. முரண்பாடுள்ள இயல்புகளைக்கொண்ட இனங்களை ஒன்றாகச்சூழ்ச்சியால் பிணைத்துக்கட்டுவதால், கலவரமும் மனக்கிலேசமும் தொல்லையுமே வளர்ந்தன, எனவே எதிர்காலத்தில் தொல்லைகள் வளர்ந்து இந்தியா இரத்தக் காடாகாதிருக்க வேண்டுமானால், இப்போதே சமரசமாக இனவாரியாக இந்தியாவைப் பிரிக்கவேண்டும்.

6. இனவாரியாக நாடு பிரிக்கப்படுவது என்பது புதிதுமல்ல கேட்டறியாததுமல்ல, ஏற்கனவே இந்தியாவில் பிராஞ்சு இந்தியா, டச் இந்தியா, போர்த்துகல் இந்தியாக்கள் உள்ளன. இது போல் முஸ்லிம் இந்தியா, ஆரிய இந்தியா, திராவிட இந்தியா என்று மூன்று தனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

7. சுதேச சமஸ்தானங்கள் 574 உள்ளன. அவைகளில் தனித்தனி ஆட்சி, தனித்தனி முறை, அது போல், மூன்று பெரும்பகுதிகள் தனித்தனி ஆட்சி முறையுடன் தத்தமது இன இயல்புகளை வளர்த்துக் கொள்ள வழிதேடிக் கொள்வது, தடுக்க முடியாத உரிமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திராவிடம்.pdf/6&oldid=1634987" இலிருந்து மீள்விக்கப்பட்டது