பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சிறுகதைகள்



துவண்ட உள்ளத்தோடு சுற்றிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. ‘களுக்’ என்று சத்தம் கேட்டுத் திரும்பினான். ஆம்... சேல் கெண்டையே சிக்கிவிட்டது. அவளுடைய அலையும் விழிகளிலே அவன் அற்புதத்தைக் கண்டான். தன் புருவ வில்லினால் அண்ணாமலையை அக்கக்காகக் குத்திக் கொன்றுவிட்டாள். அந்த மாதுளை மலர் போன்ற அதரங்கள் அண்ணாமலையின் உள்ளத்திலே உணர்ச்சிப் புயலைத் தூண்டிவிட்டன. கண்டாரைக் கவரும் அவள் அண்ணாமலையையா விட்டு வைப்பாள்?

அண்ணாமலையை மட்டுமென்ன; அவன் போன்ற மற்ற ஆண்களையும்தான் அவள் தன் புன்சிரிப்பினால் கவர்ந்தாள். அண்ணாமலை ஒவ்வொரு திக்கிலும் சென்று, ஒவ்வொரு கோணத்திலும் அவளை ரசித்தான். ஆனால் அந்தப் ‘பூங்கோதை’ அந்த வளையல் கடையை விட்டு அசையவில்லையே! அழகியாயிருந்தாலென்ன, கல்லூரி மாணவியாயிருந்தாலென்ன, கம்பனின் சூர்ப்பனகையாயிருந்தாலென்ன, அவர்கள் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள் துணிக்கடைக்காரரும். வளையல், ரிப்பன் கடைக்காரரும்! அவர்கள் பொறுக்கும் ‘டிசை’னில் தான் வித்யாசமே தவிர. அவர்கள் வாங்குவது என்னவோ கண்ணாடி வளையல்களும், ‘இமிட்டேஷன்’ நகைகளும் தான்!

ஆம்! பெண்கள் ‘இமிட்டேஷ’னில் உள்ளத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். இதைப்போலத்தான் விமலாவும் அண்ணாமலையிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தாள் அவன் ஒரு ‘இமிட்டேஷன்’- ‘டால்’ அடிக்கும் பட்டை தீட்டப்பட்ட கண்ணாடி-என்பதை அறியாமல்! பெண்களைப் போலத்தான் சில ஆண்களும் அவளுடைய அழகையும் ‘மேக்-அப்’ பையும் அளக்கிறார்களேயன்றி உள்ளத்தை, அவளுடைய பண்பை அளப்பதில்லை. சிலர் காதல் செய்யப் பழகிக்கொள்கிறார்கள்; பழக்குகிறார்கள்.