பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

91


ஆனால் இதற்கு எத்தனை பேர் பலியாகிறார்கள் தெரியுமா?

பாவம்! விமலா அண்ணாமலைப் படுமடுவிலே வீழ்ந்து விட்டாள், குளிர் நீரோடை என்றெண்ணி! அவள் மேலும் தப்பில்லை. அவள் என்ன செய்வாள்? அவள் ஒரு காம்பொடிக்கப்பட்ட குண்டு மல்லிகை. மலர் செடியிலிருந்து பறிக்கப்பட்டதேயொழிய, மணத்திலிருந்து பறிக்கப்படவில்லை... இன்னும் வாசனை வீசிக்கொண்டேதான் இருக்கிறது.ஆம்.. அவள் ஒரு இளம் விதவை. ஆனால் அவளுடைய பெற்றோர்கள் புத்திசாலிகள்; அஞ்சாத நெஞ்சர்கள். அதனால்தான் கல்லூரியிலே சேர்த்து விட்டனர், விமலாவை!

இந்தக்கன்னிகல்லூரியிலேதான் சிக்கினாள் அண்ணாமலையிடம். அவனுடைய அழகை ரசிக்கும் தன்மைக்கு இரையானாள் விமலா விமலாவின் மனோ நிலையை அறியாது அழகி வேட்டையாடுகிறான் அண்ணாமலை. அவன் ஒரு குண்டுமல்லிகையை முகர்ந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு ரோஜாவுக்கு ஆசைப்பட்டான். அங்கேதான் அண்ணாமலை ஒரு பெருத்த கொலை செய்து விட்டான். ஆம்! அந்த மலரைக் கசக்கிவிட்டான்.

பாவம்! விமலா கெடுக்கப்பட்டாள். இன்னும் ஒன்பது மாதத்தில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விடுவாள்.

இப்போது அண்ணாமலை விமலாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவனுக்குத்தான் எத்தனையோ விமலாக்கள் ‘சந்தை’யிலே கிடைக்கிறார்களே!

விமலா அழுதாள்; புரண்டாள். ஆனால், பலன்...? அண்ணாமலை அவளைத் திரும்பியே பார்ப்பதில்லை. வகுப்பு முடிந்ததும் அவளைப் பார்க்காமலே எழுந்து சென்றுவிடுவான், வேறொரு பக்கமாக!