பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சிறுகதைகள்


தாழ்வாரத்தில் நுழைந்திருக்கிறேனே அதைப் பார்த்துக் கேலி செய்யவாவது நீ என் மணவிழாவுக்கு வந்திருக்கக் கூடாதா? 'எப்படியடா இந்த மாற்றம் ஏற்பட்டது?' என்று என்னைக் கேட்டு விபரம் அறியும் ஆவல் உனக்கு இல்லாமற் போய் விட்டது?

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்துவிடல்'

என்ற குறள் மொழியை டெல்லிக்குச் சென்றதும் மறந்துவிட்டாயா? பிறகேன் நண்பா, என்னை இப்படிப் பழிவாங்கினாய்? வரத்தான் முடியவில்லை, ஒரு வாழ்த்தாவது அனுப்பக் கூடாதா? என்மீது தான் கோபம்! என் மனைவி—அதாவது உன் தங்கைக்காவது மணவாழ்த்து அனுப்பியிருக்கக் கூடாதா? போகட்டும். இதற்காவது பதில் எழுது.

அன்பு நண்பன்

பாபு

சேகரிடமிருந்து, பாபுவுக்கு இரண்டொரு நாட்களில் பதில் வந்தது. அது: . அன்புள்ள பாபு! மணமகளின் நிழற்படத்துடன் நீ அனுப்பிய மணமடல் கிடைத்தது. அதனைத் தொடந்து உன் கடிதமும் வந்தது. தங்கைக்காவது வாழ்த்து அனுப்பக்கூடாதா என்று கேட்டிருக்கிறாய்! எப்படியடா அனுப்புவது? என்னை விவாகரத்து செய்து கொண்ட சாரதா. உடனே எனக்குத் தங்கை முறை ஆகிவிடுவாளா?

அன்பு நண்பன்

சேகர்