பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரேத விசாரணை

டாக்டர் பிச்சுமூர்த்தி நல்வழிப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ‘வில்ஸ்’ சிகரெட்டின் புகையை அறையெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார். கம்பவுண்டர் கந்தசாமி நாயுடு மருந்து பாட்டில்களை ஒழுங்காக அடுக்கிவைத்து பீரோவைப் பூட்டினார். தன் நீலக்கோட்டை ஒரு முறை சரிபார்த்துவிட்டு ‘ஆபரேஷன் ரூம்’ பக்கம் சென்று அங்கு எரிந்துகொண்டிருந்த ஐநூறு பவர் மின்சாரவிளக்கை நிறுத்திவிட்டு ஒரு கனைப்புக் கனைத்தபடி பொடி டப்பாவைத் தட்டினார். கெடிகாரம் ‘டாண் டாண்’ என்று அடித்தது. மணி ஒன்பது. “சீக்கிரம் பூட்டிவிட்டு கிளம்புங் காணும்” என்று சொல்லிக்கொண்டே சிகரெட்டை எறிந்துவிட்டுப் புத்தகத்தையும் மேஜை மேல் போட்டபடி டாக்டர் எழுந்தார்.

தெருப்பக்கமாகத் தம்பட்ட ஒலியும் அதைத்தொடர்ந்து ஓர் குரலும் கிளம்பின. “நாளைக் காலை எட்டு மணிக்கு வினைதீர்த்த ஸ்வாமி கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் அதிவிமரிசையாக நடைபெறும். பக்தர்கள் வருக... வருக”— ஆலயப் பிரவேச விளம்பரம் அது!

“என்ன கம்பவுண்டர்! ஊர் ரகளைப்படுதே— உமக்கெல்லாம் சம்மதந்தானே?” டாக்டர் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நாயுடுவின் முகத்தை ஆவலோடு நோக்கினார்.