கலைஞர் மு. கருணாநிதி
99
“எனக்கு ஒருத்தருமில்லிங்க... நீங்கதான் கடவுள் மாதிரி என்னைக் காப்பாத்தணும்... ஆ... அய்யோ... அப்பா” மீண்டும் கதற ஆரம்பித்தாள் கர்ப்பவதி.
“உம்... சீக்கிரம் ‘கேட்’டைப் பூட்டு” டாக்டர் கம்பவுண்டருக்கு உத்தரவிட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் முகத்தில் மீண்டும் ஒரு தடவை ‘டார்ச்சை’ அடித்து “அனாதையாம் அனாதை... அனாதைக்குப் பிள்ளை ஆசை!” என்று கிண்டல் செய்தார். “எல்லாம் காசுக்குத்தான்” கம்பவுண்டர் சிரித்துக்கொண்டே இந்த வார்த்தைகளை டாக்டரின் முன்னே சமர்ப்பித்து, ஏதோ மேதாவித்தனமாகப் பேசிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
“ஏ....நீ... என்ன ஜாதி? டாக்டருக்குக் கொடுக்கப் பணம்இருக்கா?” நாயுடுகாரு மீசையை முறுக்கிக்கொண்டே அவளைப் பார்த்தார்.
“நான்... பறைச்சி சாமி; எங்கிட்ட ஏதுங்க பணம்?”
இதை அவள் முடிக்கவில்லை. “தூ... பற நாயே... துரத்து கழுதையை... உம்..... ஒத்தி நில்லு!” டாக்டர் பிச்சுமூர்த்தி அவசரமாகக் கீழே இறங்கினார். கம்பவுண்டர் கனல் தெறிக்கும்படி ஒரு கோரச் சிரிப்புச் சிரித்துவிட்டு “அரிஜன மங்கையா?... ஆஸ்பத்திரியில் பிரசவமாக்கும், அர்த்தராத்திரியிலே! காலையிலே ஆலயப் பிரவேசம் பண்ணு போ!” என்று குட்டி உபதேசமும் செய்து முடித்து ‘போர்டு லைட்’டையும் நிறுத்தினார்.
‘வினை தீர்த்தவூர் கிராம தர்ம ஆஸ்பத்திரி. எந்நேரமும் சிகிச்சை செய்யப்படும்’ என்ற விளம்பரபோர்டு இருட்டில் மறைந்துகொண்டது.
டாக்டரும் கம்பவுண்டரும் வேகமாக நடக்கத் துவங்கினர். “அடக் கடவுளே... தயவில்லிங்களா?” பறைச்சி உரக்கக் கதறினாள்; ஏமாற்றத்தோடு கலந்த அந்த