பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதத்தில் இடம் பெற்ற இப்படிப்பட்ட கதைகள் பல. இவையேயன்றி, தெய்வங்களின் பெயரால் செவிவழிக் கதைகளாகப் பேசப்பட்டவையே பின்னர் புராணங்களாக வளர்ந்தன. அவை மக்களின் பக்தியுணர்வை வளர்த்து, மதவழி நம்பிக்கைகளை நாட்டவே துணையாயின,


பல கதைகள் குழந்தைகளை அச்சுறுத்தவும், வயது வந்தவர்களின் மூடநம்பிக்கையை நிலைப்படுத்தவுமே பயன்பட்டன. வேறுபல கதைகள் சமுதாயத்தில் நிலவிய பிறவி ஏற்றத் தாழ்வையும், சாதிமுறையையும், செல்வர் - வறியர் என்னும் வேற்றுமையையும், அவரவரும் தம் முற்பிறவியில் செய்த பாவ - புண்ணியங்களின் விளைவு, தலைவிதி என்று ஏற்று நம்பிக்கிடக்கவும் ஏதுவாயின. கதை கேட்கும் விருப்பம் மக்கள் இயல்பாதலின் புராணங்களையும், இதிகாசங்களையும் திருக்கோயில்களில் கதைப்பாட்டாகச் (காலட்சேபம்) சொல்லும் முறை ஆயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்னர் பல்லவர் ஆட்சிக்காலத்தில் வளரலாயிற்று. இது போன்ற கதைகள் கிரேக்கப் புராணங்களிலும், மேல்நாட்டாரின் தொன்மைக் கதைகளிலும் உண்டென்றாலும், மேல்நாடு எய்திய அறிவியல் சிந்தனை - மதக்கொள்கை மறுப்புணர்வு ஆகியவற்றால் அவை பக்தியோடு, கண்மூடித்தனமாக நம்பப்படுவதில்லை.

நம்முடைய நாட்டிலும் இருநூறு ஆண்டுகட்கு முன்னர் மேல்நாட்டு முறைக்கல்வி பரவத் தொடங்கியதன் விளைவாக வரலாற்றுச் செய்திகள் கதை வடிவம் பெற்றன. தறுகண்மையுடன் போரிட்ட வீரர்கள், ஏழைகளின் பசித்துயர் போக்கப் பொருள் தேடக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், நல்ல தங்காள் போன்று கொடுந் துயரத்திற்கு ஆளான மகளிர் பற்றியெல்லாம்

2