பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனையுடன் கலந்து கதை கூறும் பழக்கமும் உருவாயிற்று. பெண்களிடையே விடுகதை போடுவதும், விடுவிப்பதும் ஒருவகையில் கற்பிக்கப்பட்ட புனைந்துரையில் உண்மையைக் கண்டறியத் தூண்டுதல்களாக நிலவின.

மேல்நாட்டில் அச்சுக்கலை வளர்ந்த நிலையில், ஒரு எழுத்தாளன் தான் கண்டுணர்ந்த ஒரு சமுதாய நிகழ்ச்சியையோ - கற்பிக்கக்கூடிய ஒரு சூழலையோ கதையாக வரையும் வழக்கம் வளரலாயிற்று. அதன் பயனாகவே சமுதாய வாழ்வில் உள்ள கேடுகளையும் அநீதிகளையும் மக்களிடம் சுட்டிக் காட்டி ஒழிக்க விரும்பியவர்கள் அதற்கேற்ற களனும் கருவும் அமைத்துக் கதைகளை வடிக்கலாயினர்.

புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு வளர்ந்ததும், கிழமை ஏடுகளும் நாளிதழ்களும் பெருகியதும் கதைகள், குறிப்பாகச் சிறுகதைகள் ஆயிரக்கணக்கில் தோன்றத் துணையாயின. அந்த வகையிலேயே நம்முடைய நாட்டிலும் பலமொழிகளிலும் கதைகள் உருக் கொண்டன.

புதினம் - நாடகம் - கவிதை- காவியம் - சிறுகதை முதலான இலக்கியம் ஏதுவாயினும் மக்களின் மனப்போக்கைத் தழுவியோ, அன்றி அதன் ஆசிரியனின் சமுதாயப் பார்வையைத் தழுவியோதான் அமையலாகும். அந்த வகையில் பல கதைகள் சமுதாய வாழ்வில் நிலவிய பழமைப் பிடிப்பை விவரிப்பதாகவே அமைந்திருந்தன மக்களிடம் நிலவிய மூடநம்பிக்கை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை நிலை, முதலாளித்துவச் சுரண்டல் ஆகியவற்றை உலக இயல்பென ஏற்றுக் கொண்டதாகவே இருந்தன.

3