பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

11



வந்தவன் மளமளவென்று என் ‘வயிற்றை’க் காலி செய்து அந்தக் கிழிந்த புராணத்தையும் தூக்கி வண்டியிலே போட்டுக் கொண்டு போய்விட்டாள். சில நாட்கள் என் வயிறு உப்பி நான் திக்குமுக்காடிக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் நாலு நாள் ஐந்து நாள் என்று இந்தப் பக்கம் தலைகாட்டாத நகரசபைக் குப்பை வண்டி என் புராணப் படிப்பில் இப்படி மண்ணைப் போடுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாரோ புது ஆபீசர் இந்தப் பக்கம் வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை; இரண்டு மூன்று நாட்களாகத் தெருவைச் சுத்தம் செய்வதில் தீவிரம் காணப்படுகிறது. இதுவும் எத்தனை நாளைக்கு? “வந்தாற்போல மாமியார் பந்தடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்” என்று பழமொழி சொல்வார்களே, அது போலத்தான் ஆகிவிடும்.

நானிருக்குமிடத்திற்கு நாலைந்து வீடு தள்ளி ஒரு பஜனை மடம். அந்த மடத்தில் அடிக்கடி புராணப் பிரசங்கங்கள் நடைபெறும். ஒலிபெருக்கியின் மூலமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன். பாகவதர்கள் பல விஷயங்களைப் பூசி மெழுகிப் பேசியிருக்கிறார்கள் என்பது அந்தப் பழைய புராணத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. கணவனில்லாத சமயம் வீடு புகுந்து தன்னைக் கற்பழித்தவன் இந்திரன் என்று தெரிந்த பிறகும், “ஆகா! இதுவல்லவா இன்பம்! இதுநாள் வரையில் ஏங்கிக் கிடந்த சுவைமிகு விருந்தை இன்றல்லவா கண்டேன்” என்ற மனநிறைவுடன் அவனைத் தழுவிக் கிடந்தாள் அகலிகை என்பதை நான் படித்தல்லவா தெரிந்து கொண்டேன்.

தாருகாவனத்துத் தபோதனர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்! அவர்கள் பத்தினிகளோ பத்தரை மாற்றுத்தங்கங்கள் மேனியின் பளபளப்பில்! பறிக்கப்படாத பாரி-