பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சிறுகதைகள்



இந்தப் பாடலைத்தான் அந்தக் கசங்கிய தாளில் நான் படித்துப் பார்த்தேன். அய்யோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடையோரம் அப்படியே சப்ரகூட மஞ்சமாகி விடக்கூடாதா? எனக்குப் பக்கத்திலே ஒரு பெண் குப்பைத் தொட்டி வந்து சேரக்கூடாதா? அப்படி ஓர் அதிர்ஷ்டம் வந்தால் அவளோடு நான் எவ்வளவு இன்பமாக இருப்பேன். புதிய புதிய காதல் மொழிகள் எல்லாம் பேசுவேன். “கண்மணி” என்று அழைப்பதற்குப் பதில் அவளைக் ”குப்பைமேனி” என்று அழைத்து அணைத்துக்கொள்வேன். பிறகு எங்களுக்குப் பொழுதுபோவதே தெரியாது. இப்படியெல்லாம் காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது. பாவம், ஆண்டாள் யார் பெற்ற பெண்ணோ! பெற்றவர்கள் தூக்கியெறிந்து விட்டுப் போய்விட்டார்கள். யாரோ ஒரு ஆழ்வார் எடுத்து வளர்த்தாராம்! அந்த அம்மையார், கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன்தான் கலந்தாரோ தெரியவில்லை. ஒரு பாட்டுப் படித்துவிட்டே இந்தப் பாடுபடுகிறேனே, எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பைத்தியக்கார விடுதியின் ஓரத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டியதுதான்!

எப்போதுமா இப்படிப்பட்ட தாள்கள், நூல்கள் கிடைக்கின்றன! பெரும்பாலும் எச்சில் இலை, வாழைப்பழத் தோல், ஆரஞ்சு, கமலா தோல் இப்படித்தான் ஏதாவது வந்துகொண்டிருக்கும். சில நேரங்களில் செத்துப்போன எலிகளை என் வயிற்றுக்குள் போடுவார்கள். முனிசிபாலிடி வண்டி எப்போது வரும் என்று மூக்கைப் பிடித்துகொண்டு உட்கார்ந்திருப்பேன் தெருக்கோடியில் ஒரு வீட்டிலிருந்து இரவு 12 மணிக்கு மேல் வேலைக்காரப் பையன் என்னருகே வருவான்.