பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

23


வருது” என்று பாட ஆரம்பித்து விடுகிறது. இரண்டு கனமான மழைத்துளிகள் பார்வதியின் முகத்தில் விழுந்து சிதறின.

உலகை அதிரச் செய்யும் இடிகள்-வான மனிதனின் அகோரச் சிரிப்பு-பயங்கரக் கண்வீச்சு-கடலைக் கவிழ்த்து விட்டதுபோல மழை இமயம் உருண்டு விந்தியத்தில் மோதிடுவது போன்ற அதிர்ச்சி!

பார்வதிக்கு பானு நனைந்து விடுவாளே என்ற பயந்தான். பாவம், அந்த ஏழைக்கு எஜமான் வீட்டில்-இல்லை. இல்லை.... குழந்தையின் மேல் அவ்வளவு பாசம். மனிதவர்க்கம் என்பது ஏழைக் கும்பல் தானே. பணக்காரமனிதர் மிருகக் கூட்டம். அதில் மனிதர்களும் தவறிப் பிறப்பதுண்டு. ஏழை மனிதர் குழுவில் துன்பம் தாங்கமாட்டாமல் மிருக வளர்ச்சியடைவோருமுண்டு. அந்த வளர்ச்சி இன்னும் பார்வதியைப் பிடிக்கவில்லை. இதெல்லாம் ரஷ்யப் பேச்சு என்பார் நல்லகண்ணப்பிள்ளை. ரஷ்யா என்றால் அவருக்கு விஷயம் சாப்பிடுகிற மாதிரி.

பார்வதி நன்றாக நனைந்து விட்டாள். குழந்தைக்கு ஒரே பயம்; அலற ஆரம்பித்துவிட்டது. மரத்தடியில் நின்றுவிட்டாள் பார்வதி. அவ்வளவு கஷ்டத்திலும், பயங்கரத்திலும் வரப்போகிற அந்த இன்ப இரவு அவள் முகத்தில் தனித் தெளிவை அதிகப்படுத்தியபடி இருந்தது.

திடீரென்று அந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்தது.

மழை நின்றுவிட்டது. புயல் ஓய்ந்து விட்டது.

நல்லகண்ணுப் பிள்ளையின் மோட்டார் வெகு வேகமாகச் சாலையில் பறந்து வந்தது.