பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

27


அச்சமின்றி அம்மையின் அருகே சென்றான். “பத்ரகாளீ! மகாதேவி! மகிஷாசுர மர்த்தினி!” என்று கூவினான்.

“யார் அது?” காளி கேட்டாள்.

“என்னைத் தெரியவில்லையா?” என்று கதறினான் பக்தன்.

“தெரியவில்லை... சொல்!”

“நான்தான் உன் பக்தன்-காளிதாசன்!”

“எந்தக் காளிதாசன்? நாக்கில் எழுதி நாவலனாக ஆக்கினேனே, அந்தக் காளிதாசனா?”

“இல்லை தாயே... நான் அவனில்லை! நான் இயற்கையிலேயே கொஞ்சம் புத்திசாலி; ஆனால் உன் பக்தன்!”

“சரி போகட்டும். பக்தா! என்ன வேண்டும் உனக்கு?”

“என்ன தாயே, இப்படிக் கேட்கிறாய்? ஊரிலே சூறை நடக்கிறதே உனக்குத் தெரியாதா?”

“சூறையா?”

“ஆமாம் தேவி! கொள்ளை கொள்ளையாக மக்கள் சாகிறார்கள். கொடுமையான வாந்திபேதி!கொடிய விஷக் காய்ச்சல்! பிளேக்காம்; புதுவித இங்கிலீஸ் வியாதி! காமாலை...! அய்யய்யோ... சொல்லத்தரமல்ல தாயே; கூடை கூடையாகக் குழந்தைப் பிணம்-பாடை பாடையாகப் பெரிய பிணம்!”

“அய்யோ... அப்படியா? எனக்குத் தெரியாதே!”