28
சிறுகதைகள்
“உண்மைதான் அம்மா உண்மைதான்! உன் மக்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் ஒழிந்துவிடுவார்கள்!”
“பக்தா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா?”
“ஆயிரம் சொல், அம்மையே!”
“கொடிய நோயினால் அழிந்துவிட்ட குடும்பங்களில் மிச்சமிருப்பவர்களிடம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைச் சொல்!”
“அனுதாபம் கேட்க அடியேன் வரவில்லை சக்தி; அபயங் கேட்க வந்திருக்கிறேன். மாளுகின்ற மக்களை மீட்பதற்கு மாதாவிடம் முறையிட வந்திருக்கிறேன். இங்கு நான் வந்துவிட்டேன். இந்நேரம் எத்தனை ஜில்லிட்ட உடல்களோ! கணக்குத் தெரியவில்லை. சுடலைக்கு ஓய்வில்லை. நெருப்புக்குச் சரியான தீனி. எழுந்தருளுவாய் என்னம்மையே!”
“இயலாது அப்பனே, இயலாது! என்னை மன்னித்து விடு பக்தா. போய்வா!
“மன்னிப்பதா? நானா? அகிலாண்டேஸ்வரியை இந்தப் புல்லன் மன்னிப்பதா? மண்டியிடுகிறேன்; என்ன கோபம் இருந்தாலும் மறந்துவிட்டுப் புறப்படு பராசக்தி!”
“புலம்பினாலும் அழுதாலும் புண்ணியமில்லை!”
“ஏன் காளி, ஏன்? துஷ்டங்களை அழித்து தூயவர்களைக் காப்பாற்றும் அருள் விழி பெற்றவளே! அனந்தநாயகி! கருணைபொழியும் உன் கண்களைத் திறந்து, கதியற்றுச் சாகும் அபலைகளை, அனாதைகளை, உன் திருப்புதல்வர்களைக் காப்பாற்ற ஏனம்மா தயக்கம்?”