கலைஞர் மு. கருணாநிதி
29
“கருணை பொழியும் கண்கள் எனக்கு இப்போதில்லையடா மகனே!”
பக்தனின் மெய் நடுங்கிற்று, குரல் கம்மிற்று. கனைத்துக்கொண்டான் பீதியோடு! காளியை நிமிர்ந்து பார்த்தான். கர்ச்சித்தான்.
“கருணைக் கண் இல்லையா? காளியா நீ ? அல்லது கள்ளியா? பிணக்கொலு கண்டு பெருமகிழ்வு கொள்ளும் பேய்க்கும் உனக்கும் என்ன வேறுபாடு? எருமையை வதைத்தாய்-சிங்கத்தை அடக்கினாய்-மமதையாளன் சிரசை நறுக்கினாய்-அப்போதெல்லாம் உன் கண்களில் கனல் உண்டு! மற்ற வேளைகளில் அன்புப் புனல்தானே உண்டு. அப்படித்தானே கேள்விப்பட்டிருக்கிறேன், உன்னைப்பற்றி. நீ என்னை ஏமாற்றத்தானே பார்க்கிறாய்? உன் பிள்ளைகளின் உயிர்கள் பொல பொலவென உதிரும் போது உனக்கு இந்தக் காட்டோரத்துப் ‘பங்களா’விலே ஓய்வு பெறும் வேலையா? மிக நன்றாயிருக்கிறதம்மா தாய்ப் பாசம்!”
“மகனே! என்னதான் நீ திட்டினாலும், தீப்பொறி பறக்க வசை புராணம் பாடினாலும் என்னிடமிருந்து கருணையை எதிர்பார்க்க முடியாது! காளிதாசனை, காளமேகத்தை கவிதை பாடச் செய்த காளியல்லடா நான்; இப்போது நான் கருணையற்றவள்! என் கண்களிலே அன்பின் ஒளி கிடையாது!”
இதைச் சொல்லும் போது காளியின் தொண்டை கரகரத்தது. அழுகுரல் கேட்டது. விம்மும் ஒலி பக்தனின் காதைக் குடைந்தது. பக்தன் பதறினான்.
“ஏன் தேவி அழுகிறாய்? என்ன நடந்தது?”