பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சிறுகதைகள்



“உன்னைப் போல ஒரு பக்தன் செய்த வேலைதானடா எல்லாம்!”

“என்ன செய்தான்? எந்தப்பக்தன் பாதகம் புரிந்தான்? பார்வதி தேவியார் அழவேண்டிய கட்டத்தைச் சிருஷ்டித்தவன் யார்? பத்மாசனி! சொல்லம்மமா!”

“கேள் கவனமாக! உலகத்து மக்களை யெல்லாம் ஒரு சேரக் காப்பாற்றும் திறனும் திறமையும் பெற்றவள்தான் நான். அதுபோலக் காப்பாற்றியும் வந்தேன். இப்போது ஊரிலே நடப்பதாக வர்ணித்தாயே பயங்கரச் சாவும், அதற்குக் காரணமான நோய்களும்; அவைகள் எல்லாம் என் பார்வைபட்ட மாத்திரத்தில் பஞ்சாய்ப் பறக்கும். பரமசிவனாரின் நெற்றிக்கண்ணுக்குமில்லாத சக்தி என் நேத்திரங்களுக்கு உண்டு என்று அவரே கூறிடுவார் என்னை அணைத்திடும்போது! அநீதியை அழிக்கும் அக்கினியும் உண்டு; அனாதைகளை ரட்சிக்கும் அருள் நோக்கும் உண்டு என் திருவிழிகளுக்கு! அந்தச் சக்தியைப் பாழ்படுத்தி விட்டானப்பா ஒரு பரம பாதகன்!”

“எப்படித்தாயே? எப்படி?” பக்தன் பதறினான் மறுபடியும்.

“குறுக்கிடாமல் கேள், மகனே! ஒரு பக்தன்-பணக்காரன்! அவனுக்கு ஒரு குழந்தை. அந்தக் குழந்தையின் கண்ணிலே ஏதோ சிறு கோளாறு! எனக்குப் பிரார்த்தனை செய்து கொண்டான். குழந்தையின் கண் வரவரக் கெட ஆரம்பித்தது. மருத்துவர்கள் மருந்துப் பச்சிலைகள் மூலம் சிகிச்சை ஆரம்பித்தனர். குழந்தைக்கு கண்கள் சுகம் பெறத் தொடங்கின. அப்போது பக்தன் எனக்கு வேண்டுதல் விடுவதாகப் பிரார்த்தனை செய்துகொண்டான்.