சபலம்
காற்றைக் கிழித்துக்கொண்டு ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ்’ திருச்சி நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. சென்னையில் இரவு 8-மணிக்கு வண்டியில் ஏறியவர்கள் அலுப்போடும், களைப்போடும், போராடிக் கொண்டு முதுகை வளைத்துக்கொண்டே அமர்ந்திருந்தனர். சென்னை ரயில் நிலையத்தில் இடம் வாடகைக்கு விடும் பொடிப்பயல்கள் பலருண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே இப்படியே நடத்திப் பழகிக்கொள்ளுகிறார்கள்.
வண்டியில் ஏறியோ அல்லது ஏறாமல் ரயில் மேடையைச் சுற்றிக்கொண்டோ இடம் அகப்படுமா என்று தவித்துக் கொண்டிருக்கிறவர்களிடம், கதைகளில் பகவான் ‘பிரத்யட்ச’மாவது போல ஒரு பொடியன் வந்து நிற்பான். “சாமி! இங்கே வாங்க நல்ல இடம்” என்பான். அவன்கூடச் சென்றால் போதும்; வண்டிக்குள் அருமையான இடத்தைக்காட்டி, பலகையில் அவன் விரித்திருந்த ‘பட்டு மெத்தை’யை எடுத்து முண்டாசு கட்டிக்கொள்வான். அந்த இடத்தில் தூங்குவதற்கு, டிக்கட் பணம் போக-அவனுக்கு ஒரு நாலணா வாடகை. இப்படிப் பல பையன்கள் வாடகை வியாபாரம் நடத்துவார்கள். அவர்கள் கண்ணில் அகப்பட்டு, கருணைக்குப் பாத்திரமான