பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சிறுகதைகள்


காக முயன்றாள். குமரேசின் தோளிலிருந்த துண்டை எடுத்துப் பலகைக்குக் கீழே விரித்து, தானும் கீழேயே படுத்துக்கொண்டாள். அவள் படுக்கும்போதே குமரேசைப் பார்த்து வழக்கமான புன்சிரிப்பைக் கொட்டிவிட்டுச் சாய்ந்தாள். ஆனால் குமரேஸ் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவன் நெஞ்சு குமுறுவது அவளுக்கு எப்படித் தெரியும்? எதிரேயிருந்தவனுக்கு இப்போது தலையைக் குனியவேண்டிய வேலை ஏற்பட்டது. கண்களை மூடித்தூங்க முயலும் சந்திராவின் முகத்தில் அவன் எந்தத் தனியழகைக் கண்டானோ தெரியவில்லை; ஒரே ரசனைதான். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. காய்ந்து வாடுபவனுக்கு எதிரே வட்டில் நிறையப் பொங்கலை வைத்தால்? அந்த நிலைபெற்றான் அவன்.உணர்வு ஒரு நிலையில் இல்லையென்பது அவன் அசைவுகளிலேயே ‘பளிச் பளிச்சென’ மின்னிக்கொண்டிருந்தது. சந்திராவின் தனிப்பார்வை வேறு அவனைப் பம்பரமாக ஆட்டி வைத்திருந்தது. அவனுக்கு அன்று ஒரு நல்ல வாய்ப்புதான். எத்தனையோ பெட்டிகளைத் துருவிப் பார்த்து இதுபோன்ற ஒரு நல்ல இடம் கிடைக்காமல் கடைசியில், நட்சத்திரத்துக்குக் குறி வைத்தபோது சந்திரனே விழுந்து விட்டதுபோலக் கிடைத்த வயிறு இடமல்லவா இந்த இடம்? தூங்கும் சந்திராவை இவன் ரசித்தான்; ரசித்தான்; அப்படி ரசித்தான். இந்த ரசமான கட்டத்தில்தான், குமரேஸ் முக்கால் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திரா எப்படியும் கையுங்களவுமாகப் பிடிபட்டு விடுவாள் என்று துடித்துக் கொண்டிருந்தான். எதிரே இருந்தவன் குமரேசை அடிக்கடி பார்ப்பதும், தன் கால்களால் அவள் கையை மெதுவாகத் தீண்டுவதும் மீண்டும் சுற்று முற்றும் பார்த்துச் சும்மாயிருப்பதுமே வேலையாயிருந்தான்.