பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சிறுகதைகள்


தூக்கினான்; குழந்தை அழுதது. சந்திரா விழித்துப் பார்த்து தன் கணவன் கையில் குழந்தையைக் கண்டு தூங்கத் துவங்கினாள், குழந்தையுடன் குமரேஸ் ஐந்தாறு பலகைகளைத் தாண்டி அப்பால் போனான். வாலிபனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

ரயில் வண்டி புயல் வேகத்தில் பெருமூச்சு விட்டு ஓடிக் கொண்டிந்தது. குமரேஸ் சுற்றுமுற்றும் பார்த்தான். கையிலிருந்த குழந்தையை அந்த அகோரமான இருளில் ஜன்னல் வழியே வீசியெறிந்தான். அந்தப் பசலை எந்தக்காட்டில் விழுந்ததோ? எந்தப் பாறையில் விழுந்து சுக்குநூறானதோ? குமரேசின் மனம் சிறிது சாந்தி பெற்றது. “ஒரு விபசாரியின் தொடர்பு இன்றோடு ஒழிந்தது. தன் பெயரைச் சொல்லி வருங்காலத்தை வீணாக்காமலிருக்க குழந்தையும் ஒழிந்தது. இனிமேல் நான் தனி ஆள். இந்தத்தாசி அவனோடு போகட்டும்” என்று அவன் மனம் பேசிற்று. வண்டி நிற்கும் ஸ்டேஷனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் அவன் பார்வை முன் உட்கார்ந்திருந்த இடத்தில் பாய்ந்தது. வாலிபனின் கரங்கள் இப்போது நடுக்கமின்றி சந்திராவின் கன்னத்திடம் சென்றன.அடக்கமுடியாத ஆவலுடன் அவளது கன்னக் கதுப்பை விரல்களால் அழுத்தினான். சந்திரா திடுக்கிட்டு விழித்தாள். அவன் இப்போது சிரித்தான். “சீ” என்ற பெரிய சத்தத்துடன் சந்திரா துள்ளிக் கிளம்பினாள் வாலிபனின் கன்னத்தில் அவள் கரங்கள் மாறி மாறி விளையாடின. எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். குமரேசும் அருகே வந்து விட்டான். அவனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது. ‘அத்தான்!’ என்று அவனைக் கட்டிக் கொண்டாள் சந்திரா.