பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சிறுகதைகள்


மாலையாகவும் கட்டுகிறார்கள், மணமாலையாகவும் தொடுக்கிறார்கள். அதே போல் நீங்களும் தித்திக்கும் தேன் சுவைக் கதைகளை, வாழ்வுக்கு வழிவகுக்கும் வசன நடைகளைப் புத்தக வடிவில் பின்னுகிறீர்கள்; பொய்மைப் பித்தலாட்டம், புனை சுருட்டு பொங்கி வழியும் புராணங்களும் உங்கள் சிருஷ்டியாகின்றன. ஆமாம், மனிதர் கையில் அலைக்கழியும் மலர்க்கூட்டம் போலத்தான் இந்த எழுத்துக் கூட்டமும்!”

அவன் இதய அலைகள் ஓய்ந்தன. எதையோ கண்டுபிடித்தவன் போல கந்தசாமி கண்களை விசாலமாய்த் திறந்தான். மீண்டும் கையில் இருந்த ‘ஒரிஜினலை’ ஒரு முறை பார்த்தான். அதில் ஒவ்வோர் எழுத்தும் அவனை உற்றுப் பார்த்தன. அவன் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. வாய்க்குள் உளறினான். “மகாகும்பாபிஷேகம்..... ம்.... மட உலகம்...”

அலட்சியம் நிறைந்த வெறுப்பு அவன் முகத்தில் கோடுகளைக் கிழித்தது. மீண்டும் தனக்குள் பேசிக் கொண்டான்.

“கொள்ளையடிக்கிற செட்டி செய்கிறானாம் கும்பாபிஷேகம்!...... கும்மாளம் போட்டு ஊரைக் குட்டிச்சுவராக்குகிறான். இந்தக் குருடர்களும் நம்புகிறார்கள். எனக்குத் தெரியுமே... இவன் ஏகாம்பரம் மனைவியைக் கற்பழித்த கதை. பெரியண்ணப் படையாச்சி பிராணாவஸ்தையில் இருந்தபோது அவர் வீட்டுப் பணப்பெட்டியை அமுக்கியதில்தானே இவன் வீட்டுக்குப் ‘பெரிய பண்ணை’ பட்டம் கிடைத்தது! வேதாளபுரம் வெங்கடாசலபதி கிரீடத்தின் வைரங்களைப் பெயர்த்து விற்றதில் தானே விசாலமான வீடு கட்டினான். இவற்றையெல்லாம் மறைக்க கும்பாபிஷேகம் செய்து விட்டால் போதுமா?...... அட, படுபாவி! நரகம் என்று ஒன்று இருந்-