48
சிறுகதைகள்
பைத்தியமென்றெண்ணி வீசிய சிறு சிறு கற்கள் எல்லாம் சேர்ந்து பெரிய குழப்பத்தை, போலீசாரின் குண்டாந்தடிப் பிரயோகம் வரையில் கொண்டு வந்துவிட்டன. செட்டியாரின் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந்தது. “கும்பாபிஷேகமும் வேண்டாம்; எழயும் வேண்டாம். திருப்புடா காரை” என்று கர்ஜித்தார். கார்கள் கல் மாரியோடு திரும்பின. செட்டியார் தோற்றோடுகிறார் என்ற நினைப்பில் மீண்டும் பலத்த கரகோஷம்!
‘லெக்னம்’ தவறக்கூடாது என்ற சாஸ்திரிகளின் முடிவுப்படி செட்டியார் இல்லாமலேயே கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு யோகானந்த சுவாமிகள் உபன்யாசத்திற்காகச் செட்டியார் வீட்டில் வந்து இறங்கினார். செட்டியார் சோக உருவமாகச் சாய்ந்திருந்தார். யோகானந்த சுவாமிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
"செட்டியார்வாள்!... என்னை அவமானப்படுத்த எத்தனை நாள் எண்ணியிருந்தீர்?" என்று ஆத்திரத்தை அள்ளிக் கொட்டினார் சுவாமிகள்.
“என்ன சாமி!... புரியாமல் பேசுவது...!” என்றார் சாவதானமாகச் செட்டியார்.
“இதோ பாரும்.”
யோகானந்த சுவாமிகள் விளம்பரத் தாளை எடுத்துச் செட்டியாரிடம் வீசினார்.
“திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்” செட்டியார் படித்தார்.
“இதற்கென்ன சுவாமி?”
“முழுதும் படிங்க ஐயா”