பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

49



செட்டியார் படிக்க ஆரம்பித்தார்.

“ஸ்ரீஜத் போகானந்த சுவாமிகள் பாஞ்சாலி விபசாரம் என்பது பற்றி உடன் யாசிப்பார்கள்” “அடடா!... போகானந்தர் ஆகியிருக்கு! பாஞ்சாலி சுயவரம்-பாஞ்சாலி-விபச்சாரம் என்று மாறியிருக்கு. உபன்யாசிப்பார்கள் என்பது உடன் யாசிப்பார்கள் என்று இருக்கு!... இது எந்த அயோக்கியன் செய்த வேலை?”

செட்டியார் சிம்மம்போல் உறுமினார். யோகானந்த சுவாமிகளுக்கு வாய் பேசாமலேயே கையும் காலும் ஆடின. அப்போது எதையோ புதிதாகக் கண்டுபிடித்த கணக்குப்பிள்ளை “இதோ பாருங்க இதோ பாருங்க” என்று நோட்டீசை’க் காட்டினார்.

“இப்படிக்கு அம்பாள் ஊழியர் காமநாதன் செட்டியார்” என்ற கொட்டை எழுத்துக்கள் அவை!

ராமநாதன் செட்டியார் எழுந்து அகோர நர்த்தனத்தை ஆரம்பித்துவிட்டார். பல்லைப் படபடவென்று கடித்துக் கொண்டார்.

“அச்சாபீசுக்காரன் உண்மையைத்தான் போட்டிருக்கிறான்” என்று (சொல்லவில்லை) தனக்குள் எண்ணிக் கொண்டார் கணக்குப்பிள்ளை.

“ஏய் டிரைவர்! காரை எடு” -செட்டியார் உத்தரவு.

வேதாந்தி பிரசின் முன்னே கார் நின்றது. மானேஜர் ரூம், யானைகள் புகுந்த வெண்கலக் கடையாயிற்று.

“ஏய் கம்பாசிட்டர்! டேய்” என்று உருத்திராகாரமாக அழைத்தார் மானேஜர் வேலாயுதம் பிள்ளை.