பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சிறுகதைகள்


பெண்டிரெல்லாம் ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ஆனந்தப்பட்டனர். ஆடினர், பாடினர்.

ஆனால் நாராயணியோ ஆடவுமில்லை; பாடவுமில்லை. ஆரத்தி எடுக்கவுமில்லை. நடக்கும் வைபவங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். பரமாத்மாவின் ஊர்வலம் அவள் வீட்டைத் தாண்டிப் போயிற்று. அந்த வீட்டிலிருந்து யாராவது வந்து பகவானுக்கு காணிக்கை செலுத்துவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். யாரும் வரவில்லை.

ரதம் போகும் திக்கைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள் நாராயணி. ரதத்திலே நரகாசூர வதமே சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியை அவள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மலையெனத் தோள் படைத்த நரகாசூரனின் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருக்கிறது. குகையெனத் திறந்தவாயோடு நிற்கிறான் அவன். அவனெதிரே கிருஷ்ணன் மயங்கிய நிலையில்! பாமா, வேல் பாய்ச்சும் சாயலில்! இதுவே ரதத்தில் சித்தரிக்கப்பட்டிருத்த தீபாவளிக் காட்சி. அறிவுக்கு அணை கட்டி, இன உணர்ச்சியைத் தடுக்கப் பெரும் சுவரும் எழுப்பி வைக்கும் அந்தப் பண்டிகையில் தம்மை மறந்து பங்கெடுத்துக் கொண்டு, பரவசமுற்றனர் அந்த ஊரார்.

நாராயணியின் கண்களை விட்டு ரதம் மறைந்தது. வாணச் சத்தம் அவள் காதைத் துளைத்துக்கொண்டு தானிருந்தது. ரதத்திலே அவள் கண்ட நரகாசூரவதக் காட்சி, அவள் நெஞ்சைவிட்டகலவில்லை. நினைவுகள் அலைமோதின.