பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

61



மாட்டிக் கொண்டது அந்த புள்ளிமான். போகிறான் போ! அவனாவது சுவைக்கட்டும்!” —இளங்காளைகளிடத்திலே, இப்படிப் பொறாமை வடிவத்திலே ஆரம்பமான பேச்சு, விட்டுக் கொடுக்கும் தன்மையிலே முடிவு பெற்றது.

கடவுளின் பக்கத்திலேயிருந்து கடமைகளைச் செய்கிற மனிதர் மிகவும் நல்லவராக இருப்பார்: நம்பியவரைக் கைவிட மாட்டார்; அதிலும் பிராமணர்—புரண்டு பேசமாட்டார்; பொய் கூறுவது பாபமெனக் கருதுவார். பரமசிவன் பக்கத்திலே பார்வதி போலத் தன்னையும் அருகே வைத்து ரட்சிப்பார் என்ற நம்பிக்கையிலேதான் நாராயணி கோயில் குருக்களைக் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தாள். கோயில் பிரகாரத்திலே, கர்பக் கிரகத்தின் நிழல்பட்டு இருண்டிருந்த இடத்திலே, இதழ்களைப் பரிமாறிக் கொண்டு திரும்பி இல்லம் வந்தபிறகு, அன்றிரவு முழுதும் தூங்காமல் அவள் யோசித்ததின் முடிவு, குருக்களைத் தன் மணாளனாக ஆக்கிக் கொள்வது என்பதுதான்!

“ஏண்டி நாரா, கவலைப்படுறே! நான் பிராமணன் நீ சூத்திரச்சின்னுதானே பாக்கிறே! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே எங்க ராஜாஜி, அவர் மகளை காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ? ஜாதி ஆச்சாரம் பேசினாளே, என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறையன்-ஆதிதிராவிடர்னு சொல்லிக்குவா-அவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரியுமோ? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆச்சாரம் எங்கேடி போச்சு? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு? பித்துக்குளி! சொல்றதைக் கேளுடி! பயப்படாதே! நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” -என்று கிருஷ்ணய்யர் பிரசங்க மான்றே செய்தார்.