கலைஞர் மு. கருணாநிதி
71
நான் உங்களுக்கு மனைவியாக இருக்கும் பாக்கியம் பெற்றவள் அல்லதான்; ஆனாலும், உங்கள் அடிமையாக இருக்கிறேன். மீண்டும் என்னை அந்தப் பாவியின் கையிலே ஒப்புவிக்காமல் இருப்பதாக எனக்கு வாக்குக் கொடுங்கள்”
நாராயணியின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவேன் என்று சொல்லித் தீரவேண்டிய நேரம் அது! அதனால் நாயுடு தலையசைத்தார்.
“துண்டுக் கரும்பு கேட்டவனிடம், தோட்டத்தையே எடுத்துக் கொள் என்பது போல் இருக்கிறது நாராயணி உன் பேச்சு!” என்றார். பிறகு வென்றார். கிருஷ்ணய்யர் மறுபடியும் கோயில் குருக்களானார். திருட்டுப்போன நகைகளைப் பற்றிச் சரியான புலன் கிடைக்கவில்லையென்று போலீசாரும் அறிவித்து விட்டனர். காலை முதல் அர்த்தஜாமப் பூஜை வரையிலே கிருஷ்ணய்யருக்கு கோயிலிலே வேலைதான்! இரவு இரண்டு மணி வரையில் தினந்தோறும் பக்தர்களுக்குப் பிரசாங்கம் செய்வார். அதற்குமேல் கோயில் மண்டபத்திலேயே படுக்கை, உறக்கம் எல்லாம்! நாயுடுவுக்கும் நாராயணிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த நாலாம் நாள் நல்ல வேளையாக அது இறந்துவிட்டது. அது உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நாயுடுவின் தொடர்பு அறுந்திருக்கலாம். நாராயணி கிருஷ்ணய்யர் என்று தனக்கு ஒரு நாயகர் இருந்ததையே மறந்துவிட்டாள்.
தர்மகர்த்தா ஒரு நாள் ஊரில் இல்லை என்ற செய்தி கிருஷ்ணய்யர் காதுக்கு எட்டியது. நகரசபைத் தலைவர் தேர்தலுக்காக ஏழெட்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எங்கேயோ ஒரு கடாரம்பத்திற்கு ஓட்டிக் கொண்டு போய்விட்டார் என்றும், திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அய்யர் கேள்விப்பட்டார்.