பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

73



“அடி விபச்சாரி! உனக்கு இவ்வளவு கொழுப்பா?” எனக் குதித்தார் அய்யர்.

“நான் விபச்சாரிதான் அய்யரே; விபச்சாரிதான். உம்மைப்போன்ற மனைவியை விற்கும் அரிச்சந்திரர்களின் மத்தியிலே என்னைப் போன்றவர்கள் எப்படிக் கற்போடு வாழ முடியும்?” -நாராயணி பெருங் கூச்சலிட்டுப் பேசினாள்.

“பத்து வருட சிறைவாசம்! அதைத் தாங்க உம்மால் முடியவில்லை! பத்தினியின் உடலை விற்றீர்! பகற் கொள்ளைக்காரனைப் போல, பகவானின் சொத்தைத் திருடி, மனைவியைப் பரத்தையாக்கி, மானத்தை இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்ட உமக்கு, என்னை மனைவி என்று அழைக்கவும் உரிமை வாழ்கிறதோ? தூ! வெட்கங்கெட்ட மனிதரே! போமய்யா போம்! உமது பித்தலாட்டங்களைப் பிரசங்கம் என்று போற்ற பக்தர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் போம்!”

விரல் நீட்டி தெரு வழியைக் காட்டி நின்றாள் நாராயணி.

அய்யரோ அவளை விடுவதாயில்லை. எப்படியும் அன்றைய தாகத்தைத் தணித்துச் செல்லவே விரும்பினார். எதிரே நிற்பது ஏதோ ஒரு மண் பதுமை என்ற எண்ணம்தான் இருந்தது நாராயணிக்கு.

அய்யர் அவளைத் தழுவிக்கொண்டார். “தப்ப முடியாது நீ!” என்று கரகரத்த குரலிலே கத்தினார். நாராயணிக்கும் அவருக்கும் சிறிது நேரம் கடும் போராட்டமே நடைபெற்றது. எப்படியும் விடுபட முடியாது எனக் கண்ட நாராயணிக்கு, நாயுடு மேஜையிலே ஒளித்து வைத்திருக்கும் கைத் துப்பாக்கி நினைவுக்கு வந்தது.