பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சிறுகதைகள்



“ஓம்...... சங்கராசிவ” சாமியாரின் வாயிலிருத்து கால்மணி நேரத்துக் கொருமுறை வெளிக் கிளம்பும் வார்த்தைகள் இவை.

“என்ன முதலியார்! நமது பயணம் விரைவில் நடைபெறவேண்டுமென்று பரமன் ஆணையிடுகிறானே”

“ஆண்டவன் ஆணையா?......அவசியம் புறப்பட வேண்டும்” —சம்பந்தம் துடித்தான்.

முதலியார் எழுந்து நின்று “ஸ்வாமி! நாளைக் காலையில் முழுவதும் வந்துவிடும். பிறகு அவ்விடத்துப் பிரயாணத்தை ஆரம்பித்தால்..” என்று முடிப்பதற்குள்,

“ஆகாது.....ஆகாது; எம்பெருமான் சாமிகளைக் கோபிப்பார். அற்ப விஷயத்துக்காகச் சாமிக்கும், சாக்ஷாத் பரமேஸ்வரனுக்கும் மனத்தாங்கல் ஏற்படக் கூடாது.”

சம்பந்தம் தத்தோமென ஆடினான்; அவனைச் சாமியார் கையமர்த்தி,

“சம்பந்தம்!.. பொறு! முதலியார் நம்பால் காட்டும் அன்புக்கு நாம் அவரை ஏமாற்றக்கூடாது. சரி ...... சங்கரளிடம் ஒரு நாள் தவணை கேட்கிறேன். முதலியாரே! இன்றுவரை எவ்வளவு கிடைத்திருக்கிறது?”

முதலியாரின் முகத்தில் களை உதயமாயிற்று.

“ஸ்வாமி...ஆயிர ரூபாய் எடைதான் வெள்ளி கிடைத்திருக்கிறது. காலையில ஆயிர ரூபாய் எடை வரும்.”

“சந்தோஷம். மொத்தம் இரண்டாயிர ரூபாய் எடை. எல்லாவற்றையும் தங்கமாக்கி விட்டால் போது மல்லவா?”

முதலியார் தோளைச் சொரிந்து கொண்டே தலையசைத்துப் பல் இளித்தார்.