பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சிறுகதைகள்



முதலியார் ஒரு கிண்ணம் பாலைச் சாமியிடம் நீட்டினார். அதைச் சிஷ்யன் சம்பந்தம் வாங்கிச் சாமியின் உதட்டில் வைத்தான்...

மறுநாட் காலையில் வழக்கம்போல் பூசையெல்லாம் முடிந்து வெள்ளிக் கட்டிகளும் வந்து சேர்ந்தன. சாமியார் அந்த வெள்ளிப் பாளங்களைக் கண் குளிரப் பார்த்து மூடாத்மா ஞானாத்மாவாக மாறுவது போல- நாஸ்திகன் ஆஸ்திகனாய் மாறுவதுபோல் “ஏ வெள்ளியே! நீ தங்கமாகப் போகிறாய்!” என்றார்.

இதைச் சாமியார் சொல்லும் பொழுது சம்பந்தம் தலையாட... முதலியார் முகமும் அகமும் மலர்ந்த காட்சி வெகுரம்மியமாயிருந்தது.

சாமியார் பூசை செய்ய உட்கார்ந்தார். சாம்பிராணிப் புகைச்சல், ஊதுவத்திகளின் மணம்.... அரைத்த சந்தனத்தின் வாடை...... மல்லிகை மாலைகள் தந்த குளிர்ந்த வாசனை...

“மாடியில் ஒரு சொர்க்க லோகத்தையே சாமி உண்டாக்கி விட்டது” என்றார் முதலியார்.

“சொர்க்கலோகம் இருந்தால்தானே சொக்கநாதன் வருவான்” என்றான் சம்பந்தம்.

முதலியாருக்கு இரவெல்லாம் ஒரே கனவு. தங்கமாக மாறிய வெள்ளிக் கட்டிகளின் பிரகாசம், அந்தத் தங்கக் கட்டிகளை உடைத்து வெளியூர் சென்று வியாபாரம் செய்வது, நல்ல விலைக்கு விற்ற பிறகு..... பெரிய குபேரனாவது, குபேரன் ஆனதும் உள்ளூர் பெரிய பண்ணையை ஏளனம் செய்வது... இந்தக் கனவுகளில் புரண்டு கொண்டிருந்தார். தங்கத்தை வியாபாரம் செய்யப் போன இடத்தில் போலீஸ்காரர் கையில் சிக்கிவிட்டதாக ஒரு பயங்கரக் கனவால் பண்ணையார் பதறியடித்து எழுந்தார். கண்களை நம்ப முடியாமல் கசக்கிக் கொண்டார்.