86
சிறுகதைகள்
“சந்தோஷம்! நான் இப்பொழுதே புறப்படுகிறேன்.”
“நீ எங்கே போகிறாய் சம்பந்தம்?”
“நான் போகுமிடம் எனக்கே தெரியாது. ஒரு வாரத்தில் உமக்கு ஒரு பார்சல் வரும். அதை யாருக்கும் தெரியாமல் மேல் மாடியில் கொண்டுபோய் உடைத்துப் பாரும்.”
“நான் இழந்த வெள்ளிக் கட்டிகளின் பார்சலா?”
“ஆமாம். நான் வருகிறேன். பார்சல் வரும் வரையில் மேல்மாடி திறக்கப்படக்கூடாது.”
சம்பந்தம் மறைந்து விட்டான். முதலியார் முகத்தில் சிந்தனைக் கீறல்கள். சங்கிலிச் சாமியார் நிஷ்டையில் இருப்பது ஊரெங்கும் பரவி விட்டது.
“சாமி கடவுளோடு பேசுகிறது.”
“ஒரு வேளை சொர்க்கத்துக்குப் போனாலும் போய் விடும்.”
“சிவனோடு பேசுகிறாரோ? விஷ்ணுவோடு பேசுகிறாரோ? யார் கண்டது?”
“சக்தி பூஜைக்காரரப்பா! தேவியோடுதான் பேசுவார”."
சின்னப் பண்ணை முதலியாருக்கு ஒரு நாள் ரயில்வே பார்சலில் ஒரு பெட்டி வந்துவிட்டது.
முதலியார் ஆவலோடு பெட்டியை வீட்டில் இறக்கச் சொன்னார்.
பெட்டியின் மேல் ‘வாசனைப் பொருள்’ என்ற எழுத்துக்கள் தீட்டப்பட்டிருந்தன.
இரவு... எப்பொழுது வரும் என்று முதலியார் ஏங்கிக் கிடந்தார்.
சிலமணி நேரங்களில் இரவும் வந்துவிட்டது.
வேலைக்காரர்கள் எல்லாம் அன்று சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.