கலைஞர் மு. கருணாநிதி
87
பார்சலில் இருந்து ‘கம கம’ வென்று வாசனை வந்து கொண்டிருந்தது.
திடீரென்று சம்பந்தமும் வந்து சேர்ந்தான்.
“சம்பந்தம்! எல்லாம் வெள்ளிக்கட்டிதானே?” என்றார் ஆவலாக முதலியார்.
சம்பந்தம் தலையாட்டிக் கொண்டே “ஆமாம் தூக்குங்கள்” என்று கூறினான் ஆணையிடும் தோரணையில்.
இருவரும் பார்சலைத் தூக்கினார்கள், உழைப்பு என்பது என்னவென்று தெரியாத முதலியார் ... பெட்டியின் கனத்திலிருந்து ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார். வியர்வைத் துளிகள் சொட்டச்சொட்ட மேல் மூச்சு வாங்க... ‘அப்பாடா’ என்று பார்சலை மாடியில் இறக்கினார். “வேலையின் கஷ்டம் தெரிகிறது” என்றான் சம்பந்தம் கிண்டலாக.
“வெள்ளியின் கஷ்டமப்பா!” என்று முதலியார் முணுமுணுத்துக் கொண்டார்.
சம்பந்தம் பார்சலை உடைக்க ஆரம்பித்தான். அவசரந் தாங்காத முதலியார், “அப்பா சம்பந்தம்! அது வெள்ளிதானே?” என்று துடித்தார்.
“ஆமாம்” —சம்பந்தம் பெட்டியை உடைத்து விட்டான்.
முதலியார் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டார். பிறகு எழுந்தார். அவர் அலறிவிடாமல் வாயைப் பொத்திவிட்டான் சம்பந்தம்.
பெட்டிக்குள் புழுப்போலச் சுருண்டு கிடந்தது ஒரு மனித உருவம்.
ஆமாம், சங்கிலிச்சாமியாரின் சடலந்தான் அது.
“என்னடா சம்பந்தம்?” முதலியார் பதை பதைத்துத் துடித்தார். “என் வெள்ளியும் போனதுமல்லாமல் என்னையும் கொலைகாரனாக்கிவிட்டாயே... அய்யய்யோ!”
“இல்லை... நாம் கொலைகாரரல்ல, ஆண்டவன் அடிமைகள்; பக்தாதி பக்தர்கள்.”