பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறளார் தெளிவுரை

94


6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

466

தான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டுவிடுவான்.

7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

467

தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்துத் தொடங்குதல் வேண்டும். தொழிலினைத் தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம் என்பது குற்றமேயாகும்.

8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

468

செய்து முடிக்க வேண்டிய வழியினால் தொழிலினை முயலாத முயற்சி, துணையாகப் பலர் இருந்து குற்றம் வராமல் காப்பாற்றினாலும் குற்றம் உடையதாகவே முடியும்.

9. நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை.

469

அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்கேற்பச் செய்யாமற் போனால், பிறர்க்கு நல்லவற்றையே செய்தாலும் குற்றம் உண்டாகிவிடும்.

10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

470

தொழிலினை முடிப்பதற்காக வேண்டித் தம் நிலைமைக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்வாராயின், உலகம் தம்மை இகழும். ஆதலால், இகழப்படாத வழிமுறைகளை நாடிச் செய்தல் வேண்டும்.