பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பணம் சம்பாதிப்பதற்கு முன்னே சிலருக்கு நல்ல புத்தியும் சிறந்த அறிவும் இருக்கும். ஆனால் பொருள் சேர்த்து வைத்த பின்பு மதிகெட்டு மயங்கி விடுமாம். என்னே பேதைமை! இதனைத்தான் மயக்கம்! என்று விளக்கமாகச் சொல்லி ‘மருளான்’ என்றார்.

பிறர் துன்பத்தினை நேரில் கண்டும் பசிக் கொடுமையால் வாடி வதங்குவதைக் கண்ணுற்றும் ஈயாத பிறவியை ‘மாணாப் பிறப்பு’ என்பவற்றுள் அடக்கிவிட்டார். மனிதப் பிறப்பல்லாமல் ‘பேய்ப்பிறப்பு’ என்று சொல்லுகிறார்களே அப் பிறவிதான் என்று கூறுவதும் பொருத்தமேதான்.

‘உலோபித்தனம்’ அளவு மீறி இருப்பவன் என்பதைக் கூறவேண்டி இவறும் என்று வைத்து அதன் காரணமாக அவன் பிறவியினையே கொடுமையானதாகக் கூறி அப்படிப்பட்டவன் இருந்தும் பயனில்லை என்பதனைக் குறிப்பால் உணர்த்திவிட்டார்.

நரகம் :

‘இவறுதல்’ (உலோபத்தனம்) என்னும் கடுமையான நெஞ்சத்துடன் வாழ்கின்றவன் பேச்சு, செயல், பழக்கம் வழக்கங்கள் அனைத்தும் அவனுடைய அந்த எண்ணத்தின் போக்கிலேயே தான் போய்க்கொண்டிருக்கும் என்பது இயல்பே யாகும்.

‘நரகம்’ என்று சொல்லுகிறார்களே, அங்கே தலைவனான எமதர்மன் என்பவனுடைய ‘தர்பார்’ நடந்து கொண்டிருந்ததாம். நரகம் என்பதில் உலகில் மிகக் கொடியவர்களாக வாழ்க்கை நடத்தியவர்களை வைத்துக் கொண்டு கடுந் தண்டனை யளித்து வதைப்பார்களாம். இப்படிப்பட்டவைகளைச் சொல்லிக்காட்டினாலும் நல்ல புத்தி வராதா என்று அந்த முறைகளைக் கையாண்டு சொல்லியும் எள்ளளவும் திருந்தாத பிறவிகள் இங்கு எத்தனையோ இருந்துகொண்டுதான் இருக்கின்றன.