பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

“உன்னிடம் தர்மத்திற்கு வருகின்றவர்களுக்கு நீ ஒன்றும் கொடுக்காமல், அவர்களுக்கு (யாசித்தவர்களுக்கு) அந்த வீட்டிற்குப் போய்க் கேள், கொடுப்பார்கள் - அதோ அவரைப் போய்க் கேள் : அவர் கொடுப்பார்-என்று சொல்லி அந்த விரல் அப்படியாகச் சுட்டிக் காட்டும் வேலையினைச் செய்திருக்கிறது - அது ஒரு தர்மம் ! “ஆதலால்தான் அந்த விரலை மட்டும் விட்டுவிடச் சொன்னேன்” என்று கூறி முடித்தார் தர்மராஜா.

இதைக் கேட்டவுடன் அந்த உலோபி அப்படியே ‘திடும்’ என்று விழுந்து, தர்மராஜாவின் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு அழுது விண்ணப்பமாகப் பேச ஆரம்பித்தான்.

1. ராஜாவே ! அடியேன் விண்ணப்பத்தினைக் கேட்டருள வேண்டும். தர்மம் என்பதனுடைய பெருமையினை அறியாதவனாகையால் இப்படிப்பட்ட உலோபியாக வாழ்ந்துவிட்டேன். ஆகா! எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது தர்மம் என்பதை இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.

“எவ்வளவோ பெரிய நன்மையினையும், பயனையும், இன்பத்தினையும் அளிப்பது தர்மன் என்று தெரிந்துவிட்டது ஆதலால் அடியேன் விண்ணப்பம் ஒன்று. என்னை இந்த முறை மன்னித்துப் பூவுலகத்திற்கு அனுப்பிவிடுங்கள். தர்மம் செய்து எனது வாழ்க்கையினைப் பரிசுத்தமாக்கி விடுவேன். தர்மத்தின் பெருமையினை அறியாத காரணத்தினால் தான் ‘உலோபியாக’ இருந்து விட்டேன்” என்று முறையிட்டான்.

உடனே எமதர்மன் அதற்கு இசைந்து அவன் உயிரை மீண்டும் அவனுக்கு அளித்துப் பூலோகத்தில் அனுப்பி விட்டார். உலோபி பூலோகத்திற்கு வந்து தன் சொத்து குடும்பத்துடன் மறுபடியும் வாழ ஆரம்பித்தான்.