பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அடையும் பயனும் ஆகிய இரண்டும் எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கப்பட்டன.

இவ்வாறு உலகில் பொருளீட்டி அப்பொருளால் புகழ் நாட வேண்டிய எண்ணமில்லாதவர்கள் இவ்வுலகில் வாழ வேண்டியதே யில்லை யென்ற எண்ணத்தினை ஆசிரியர் வற்புறுத்திக் கூறுகிறார். கடுமையாகவும் கூறிவிடுகின்றார்.

இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்டவர்கள் இவ் வுலகில் எப்போது பிறந்தார்களோ அன்று முதற் கொண்டே இப் பூமிக்குப் ‘பாரம்’ என்று இடித்துக் கூறிவிட்டார் என்பதாம். உலகில் வாழ்வதற்கே உரிமையில்லாதவர்கள் ஆகின்றார்கள்.

“மற்றவர்களைவிட அதிகமாகப் பொருள் சேர்க்க வேண்டும் என்னும் எண்ணமும் பேராசையும் வைத்துக் கொண்டு, அதன் பயனான புகழை விரும்பாதவர்களுடைய பிறப்பு பூமிக்குப் பாரமாம்” என்னும் உண்மையினைக் குறட்பா விளக்குகிறது.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.

பொருளொன்றினையே விரும்புகின்றான் என்னும் கீழான எண்ணத்தினைக் குறிப்பிட வேண்டித்தான் ‘ஈட்டம் இவறி’ என்று எடுத்த எடுப்பிலேயே குறட்பாவில் குறித்தார். அதனால் வாழ்வில் தேடவேண்டிய இசை யென்னும் புகழினை விரும்பாதவர்களை “இசை வேண்டா ஆடவர்” என்று சொன்னார்.

இக் குறட்பாவில் சிந்திக்க வேண்டிய கருத்து ‘தோற்றம்’ என்னும் சொல்லில் அடங்கிக் கிடக்கின்றது. தோற்றம் என்பதனால் அவன் மக்களிடையே ஒருவனாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றான் என்பது மட்டுமன்று. அவன் உலகில் என்று பிறந்தானோ அன்று முதற்கொண்டே பூமிக்குப் பாரமாக இருந்துவருகிறான் என்பதும் கருத்தாகும்.