பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

‘நிலக்குப் பொறை’ என்பதால் அப்படிப்பட்டவன் இவ்வுலகில் வாழ்வதே வீண் என்பது புலனாயிற்று. இவ்வுலகில் மக்கள் துன்பம் அடைவதற்குப் பல காரணங்கள் இருப்பினும் அவைகளுக்கெல்லாம் முதற் காரணமாக ஒன்று உண்டு.

அது இவ் வுலகில் யார் யார் இருந்து வாழத் தேவையில்லையோ அவர்களெல்லாம் இருந்துகொண்டிருப்பதேயாகும். நாம் ஏன் வாழ்கின்றோம்? ஏன் பிறந்தோம்? மானிடப் பிறவி சிறந்ததென்று கூறுவது எதனால்? என்னும் வினாக்களுக்குரிய விடையினை நன்கு புரிந்து வாழ்தலே புனிதப் பிறவி யாகுமன்றோ!

உலோபி :

பணம் படைத்தவன் உலோபியாக இருந்து வாழத் தேவையில்லை என்று கூறுவதில் பெரும் மறை பொருளான உண்மைகளும் இருக்கத்தானே செய்யும்? அவன் உயிரோடு இருக்குவரை அப்பொருள் (பணம்) அவனால் அடைக்கப் பட்டு யாருக்கும் பயனில்லாததாகத் தானே இருந்து விடுகிறது?

அவனுக்குப் பின் அப் பொருள் பலருக்கும் பயன்படுவதாகச் செய்யப்படலாம். உலக நடை அனுபவத்தில் பேசும் கருத்தினையும் நாம் சிந்தித்துப்பார்த்தல் வேண்டும். “உலோபியாக இருக்கும் பணக்காரன் இறந்துவிட்டால் கவலைப்படவேண்டா: ஆனால் அறிவு நிறைந்த பேரறிஞன் இறந்துவிட்டால் கவலைப்பட வேண்டும்.” ஏன் இவ்வாறு கூறப்படுகிறது?

பணம் படைத்த உலோபி இறந்து விட்டால் பணத்தினை அவன் எடுத்துக்கொண்டு போகவில்லை. எடுத்துக் கொண்டு போக முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் அறிவு நிறைந்த ஒருவன் இறந்துவிடுவானேயானால் நாம் கவலைப்பட வேண்டும். ஏன்? தனது அறிவினையும் தன்னுடனேயே கொண்டுபோய்விடுகின்றான்.