பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

“உனக்கு நான் உதவி செய்கிறேன். உன் கருத்து எப்படி யென்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கு ஓர் ஆயிரம் ரூபாய் நான் கொடுத்தால் நீ என்ன செய்வாய்? உன் எண்ணம் என்ன? சொல்” இவ்வாறு சொன்னதற்கு அந்தப் பிச்சைக்காரன் அளித்த பதில் அவரைத் திடுக்கிடச்செய்தது. அவன் “நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தங்கத்தாலே ஒரு ‘திருவோடு’ செய்து கொள்ளுவேனுங்க' ” என்று பதில் சொன்னான்.

பிச்சையெடுக்கும் பாத்திரத்தை உயர்ந்ததாகச் செய்து கொள்ளுவேன் என்று கூறினான். பிச்சை யெடுக்கும் இழி தொழில் அவ்வளவு ஆர்வமும் பற்றுக்கோடும் அழுத்தமாக அவனுக்கு ஊறிவிட்டது. இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயர்ந்த நிலைமைக்கு ஏற்றி வைத்தாலும் தாழ்ந்த புத்தி போகாது. இது சிலருடைய அற்பப் புத்தியாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் ஒரு காலத்தில் ஏழ்மை வாழ்க்கையினையோ அல்லது இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையினையோ நடத்தி இருந்திருப்பவர்கள். கால வேகமும் வேறு காரணங்களும் அவர்களை மேலே உயர்த்தி வைத்திருக்கும். மேலே உயர்ந்த பிறகும் அவர்களிடம் நல்ல பண்பாடு வளர்ந்திருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பது இயற்கையே யாகும்.

அப்படிக் காணப்படாமல் இருக்கின்றவர்களும் உண்டு. நல்ல நிலைக்கு வந்த பிறகும் பழைய புத்தி போகாமலேயே இருக்கின்றவர்களும் உண்டு. இதைத்தான் ‘பிச்சைக்காரப் புத்தி’ என்று கூறுகிறோம். பிச்சைக்கார புத்தி என்பதற்குப் பிச்சை யெடுக்கின்ற புத்தி யென்று அர்த்தம் அன்று! இழிவான பழைய புத்தி போகாமல் இருப்பதற்குத்தான் பிச்சைக்காரப் புத்தி என்று பொருள். நாம் இதுகாறும். பேசிய அனுபவமான கதையும் இவ்வுண்மையினைக் கூறிவிடுவதாகிறது.