பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

மொழிகள் :

நம்முடைய நாட்டில் வழங்குகின்ற பல விதமான பழமொழிகளும் சிறுசிறு அனுபவமான கதைகளும் எத்தனையோ உண்மைகளை உணர்த்துகின்றன வென்பது உண்மையிலும் உண்மை யாகும். ஒரு சிறு பழமொழியினை யெடுத்துக்கொண்டு அதன் உண்மைப் பொருளைச் சிந்திக்கும் போது வியப்பும் புதுமையும் தோன்றுகின்றன.

“பந்திக்கு முந்திக்கொள் படைக்குப் பிந்திக்கொள்” என்று ஒரு மொழியினைக் கூறுகிறார்கள். இதனுடைய பொருள் என்ன? இந்தப் பழமொழியினைச் சொல்கிறவர்கள் இதற்கு அர்த்தமும் சொல்லத்தான் செய்கிறார்கள். அதாவது, சாப்பாடிற்கு உட்காருவதற்குப் ‘பந்தி’ அமைக்கும்போது முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமாம். அப்போது தான் நன்றாக அதிகமாகச் சாப்பிட முடியுமாம்.

நாட்டில் வீரராகத் தொண்டாற்ற வேண்டுமென்று கூப்பிட்டால் அதற்கு எப்படியாவது ஏமாற்றிப் பிந்திக் கொள்ளவேண்டும் என்பதுமாகும். இப்படியாக விளையாட்டுக்கேனும் கூறி இருப்பார்களா என்றால் அதுவுமில்லை. பிறகு எப்படித்தான் இப் பழமொழி பேசப்பட்டு வருகிறது? ஆய்ந்து பார்த்த அறிஞர்கள் உண்மையினைத் தெளிவுபடுத்துவாராயினர்.

மிக நல்ல பண்பாட்டுடன் கூறப்பட்ட பழமொழி மக்களிடையே காலக்கோளாறுகளினால் சிதைந்து இவ்வாறு பேசப்பட்டு வருவதாயிற்று. “பந்திக்கு முன் நிற்க! படைக்குப் பின் நிற்க!” என்பதே அப் பழமொழியின் சொற்களாகும். இவைகள் நாளா வட்டத்தில், ‘முன் நிற்க’ என்பது ‘முந்திக் கொள்’ என்றும், ‘பின் நிற்க’ என்பது பிந்திக் கொள் என்றும் பேசப்பட்டு வரலாயிற்று.