பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அகப்பட்டுக்கொண்டு போரிடுகின்றான் நமது வீரன். போர் மும்முரம் உச்ச நிலை அடைந்திருக்கின்ற நேரம்.

தன்னிடத்தில் இருந்த அம்புகள் எல்லாம் வீசப்பட்டுவிட்டன என்பதை அறிகின்றான். மனம் சோர்ந்து விட்டானில்லை; பகைவர்களின் தாக்குதலோ தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது.

“தன் கையிலிருந்த படையாகிய வேலினைத் தன்னைத் தாக்க வந்த யானைமீது எறிந்து விட்டு, மேலும் தாக்குதற்கு வருகின்ற யானைக்கு வேல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, தன் மார்பின் மீது வேல் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதனைப் பிடுங்கி மகிழ்ச்சியால் நகைத்தான்” என்னும் கருத்தினைக் கூறுகின்றது குறட்பா:

‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்’

யானைகளை எதிர்த்துத் தாக்குகின்ற மனம்படைத்த வீரன் எவ்வளவு மன உறுதி கொண்டவனாக இருப்பான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தன்னுடைய மார்பின் மீது அம்பு பாய்ந்திருக்கின்ற தையும் அறியாமல் அவ்வளவு கடுமையாகப் போர் செய்திருக்கின்றான் என்பது கூறாமலே விளங்கும். உயிரையும் துச்சமாக எண்ணிப் போர்செய்பவனே உண்மையான வீரனாவான், அப்படிப்பட்ட போர் மறவர்களாலன்றோ நாடு காக்கப்படுகின்றது!

மார்பின்மீது அம்பு பாய்ந்திருக்கின்றது. என்பதைப் பின்னரே அவன் அறிந்துகொள்ளுகின்றான். கண்டவுடன் அஞ்சினானா? நடுங்கினானா? இல்லவே இல்லை! மேற்கொண்டு தாக்க வருகின்ற யானை மீது எய்வதற்கு அம்பு கிடைத்ததே என்று மகிழ்ந்து நகைத்தான்.

ஆண் யானையினது உயிரைக் கொண்டுபோகும்படி அவ்வளவு திறமையாக அம்பினை வீசினான் என்பதைக்