பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பிறகு நான் என்ன செய்வது? ஆதலால்தான் காலை வெட்டி எடுத்துக்கொண்டு வந்தேன்” என்று தனது வீரத்தைக் கூறி முடித்துக்கொண்டான், ஆ! என்னே வீரம்! தலை போன பிறகு கீழே கிடந்த முண்டத்தின் காலையல்லவா வெட்டி வந்திருக்கின்றான்.

போர்க்களமில்லாமல் உலகில் வாழ்வில் சிலருடைய வீரர் வேடத்தைக் காண்கின்ற பல சந்தர்ப்பங்கள் நமக்குக் கிடைக்கத்தான் செய்கின்றன. நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் காண முடிகின்றது, உண்மையான திண்தோள் படைத்த ஆண் வீரர்களைக் காணுதல் அரிதாகவுந்தான் இருக்கின்றது.

ஒரு நகரத்தில் இரண்டு கட்சிகளிடையே சண்டை மூண்டு விட்டதாம். ஒரு கட்சியில் கும்பல் அதிகமாக இருந்ததாம். எதிர்க்கட்சியில் கும்பல் குறைவாக இருந்ததாம். உடனே அதிகக் கும்பல் இருந்த கட்சியிலிருந்த ஒருவன் அதிக வீரமாகப் பேசிக் குதியாய்க் குதித்தானாம். அவனை எல்லோரும் பிடித்துத் தடுத்து நிறுத்தி விட்டார்களாம். ‘பொறுமையாக இரு’ என்று கேட்டுக்கொண்டார்களாம். ‘என்னை விடுங்கள், விடுங்கள்’ என்று. துடித்தானாம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு அவன் ‘என்னை விடுங்கள்; அவர்கள் மீது பாய்ந்து விரட்டி நொறுக்கி விடுவேன்’ என்றானாம். இந்தப் பக்கம் அதிகக் கூட்டம் இருந்ததால் அவனுடைய வீரம் உச்ச நிலையில் இருந்தது போலும்!

சில மாதங்கள் கழித்து அந்த ஊரில் மறுபடியும் சண்டை வந்துவிட்டதாம். அதே இரண்டு கட்சிகள் மோதிக்கொள்ளுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பழைய வீரனும் ஒரு கட்சியில் இருந்தான். அவன்பக்கத்தில் இருந்த கூட்டம் குறைவாகவும் எதிரிகள் பக்கம் அதிகக் கூட்டமும் இருந்தன. இந்த ஆளினுடைய வீரம் எப்படி இருக்கின்றது என்று பலர் பார்த்துக்கொண்டிருந்தனர்.