பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

இந்த வீரன் “என்னை விடுங்கள், விடுங்கள்” என்று. குதித்தானாம். ஏன் அவ்வாறு சொன்னான் என்று அறிந்த போது ‘ஓடி விடுவதற்கு’ என்று ‘புரிந்ததாம்.’ இவனுடைய கட்சியில் அதிகக் கூட்டம் இருந்தபோது அவன் ‘விடுங்கள்’ என்று கூறிய போதும், தனது கட்சியில் கூட்டம் குறைந்த போது ‘விடுங்கள்’ என்று கூறியதற்கும் உள்ள வேறுபாடு அவன் வீரத்தைப் பலரும் தெரிந்துகொள்ளும்படி செய்து விட்டதாம். இதற்கு வீரம் என்று பெயரில்லை கோழைகளின் தந்திரம் என்று தான் கூற வேண்டும்.

வீரனுடைய உணர்ச்சியினையும் பேச்சினையும் போர்க்களத்தில் வைத்துக் காட்டுவதும் பேசுவதும் சிறப்புதான் என்றாலும் காதலர் உலகத்தில் வீரனுடைய பெருமை நிறைந்த பேச்சினை அழகான முறையில் ஆசிரியர் அமைத்தார். வீரனொருவன் அழகு நிறைந்த பெண்ணைக் கண்டு அவளுடைய அழகின் மேம்பாட்டினைக் கூறுகின்றான். அப்படிக் கூறுகின்றபோது தன்னுடைய வீரத்தின் பெருஞ்சிறப்பினைக் கணக்கிடமுடியாத அளவில் சுருக்கமாகக் கூறிவிட்டான்.

நுதல்:

காதலியின்—அப்பெண்ணின்—அழகினை ஒரு மாபெரும் வீரனுடைய வாயிலாக அறிகின்றபோது அதற்குத் தனிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அப்பெண்ணின் அழகு நிறைந்த உறிப்புக்களை யெல்லாம் அவ் வீரன் ஒவ்வொன்றாகக் கண்டு சுவைத்தானில்லை! அழகு நிறைந்த ஒரே ஒரு உறுப்பினை மட்டும் கண்டான்.

அவ் வுறுப்பு ஒளி பொருந்திய அப் பெண்ணின் நுதலே (நெற்றி) தான். இவ்வொரு உறுப்பின் அழகே அவனை மயக்கித் திகைக்க வைத்துவிட்டது என்றால் வேறு உறுப்புக்களின் அழகினை அவன் எவ்வாறு சுவைப்பதென்று புரியாதவனானான்.