பக்கம்:திருக்குறளில் நகைச்சுவை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


வந்திருக்கின்றார்கள். பொங்கல் விழா மூன்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதுண்டு.

கடைசி நாள் மாடு பிடித்தல் என்னும் விழா நிகழ்ந்து வந்திருக்கின்றது. இப்போதும் எங்கேயோ சில இடங்களில் நடைபெறுவதும் உண்டு. பழங்காலத்தில் எந்த நோக்கோடு அந் நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அதே நோக்கத்தில் இப்போது நடைபெறுவதில்லை. இப்போது விளையாட்டுக்காக நடத்தப்படுவதாகிவிட்டது.

மறவன்- காளை :

'மாடு பிடித்தல்' என்னும் நிகழ்ச்சி மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாகவே அக் காலத்தில் வைத்திருந்தார்கள். வீர மறவனையே மாப்பிள்ளையாகப் பெற் வேண்டு மென்று மணம்செய்துகொள்ள இருக்கும் பெண் கூறுவாள். வீரனை எப்படித் தேர்ந்தெடுப்பது? தமிழர் திருநாளாக நடக்கும் இந் நாளில் அந்த வாய்ப்பினை உண்டாக்கிக்கொள்ளுவார்கள்.

மணமாவதற்கு இருக்கின்ற பெண்கள் பெற்றோர்ககளுடனும் உறவினர்களுடனும் ஒரு சிறிய குன்று போல் இருக்கின்ற இடத்தில் குன்றின் மேல் உட்கார்ந்திருப்பார்கள். அப்பகுதியில் பெரிய திடல் போன்ற இடம் அகலமானதாக இருக்கும். அங்கே நல்ல பலமுள்ளதும் கொம்புகளைக் கூர்மையாகச் சீவிவிட்டிருப்பதுமான காளைகளை விரட்டி ஓடவைப்பார்கள். அந்தக் காளைகளைக் குன்றின் மீது இருக்கின்ற பெண்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

குறிப்பிட்ட ஒரு வலிமையான காளையினைச் சுட்டிக் காட்டி அந்தப் பெண் சொல்லுவாள்: "அதோ தெரிகிறதே காளை, அதை யார் பிடிக்கின்றாரோ அவரையே யான் மணப்பேன்." இவ்வாறு அவள் காட்டிய காளை மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கும். மணமாகாத இளைஞர் வீரத்தோடு அஞ்சாது ஓடிக் காளையினைப் பிடித்து அடக்கி அந்தப் பெண்ணை மணப்பார். இப்படி-